மகப்பேறு அருளும் அம்மன்!
தொன்மைப் பெருமை மிக்க ஊராகத் திகழ்கிறது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி.
தொன்மைப் பெருமை மிக்க ஊராகத் திகழ்கிறது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி. ஆதியில் இது "சதுர்வேதிமங்கலம்' என அழைக்கப்பட்டது. அதுவே இன்றைக்கு பாப்பாக்குடி என அழைக்கப்படுகிறது.
அணைக்கரை எனப்படும் நீர்த்தேக்கத்தின் உபரி நீர் பாய்ந்தோடும் கால்வாய் ஒன்று அவ்வூர் வழியாகச் செல்கிறது. இதன் மேற்குக் கரையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் கோயில் கம்பீரமாக அமைந்துள்ளது.
பிரதான நுழைவாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை அடுத்து பலிபீடம், செப்புக் கவசம் போர்த்திய கொடிமரம், நந்திதேவர் பீடம் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் என்ற கட்டமைப்பில் பாண்டியர் கலைப்பாணியில் எழிலாகக் கட்டப்பட்டுள்ளது. முக மண்டப வடபுறம் கருணாம்பிகையாக அம்பாள் சிவகாமி அருள்பாலிக்கிறாள். சுவாமியை விட இத்தலத்து அம்பாளுக்கு தனிச் சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு.
Advertisement
Advertisement
திருமணத் தடை விலக, குழந்தைப்பேறு கிட்ட, தானிய விளைச்சல் பெருக, தொழில் வளர்ச்சியடைய, நீண்ட காலம் நிலுவையில் நிற்கும் வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்க எனப் பக்தர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அம்மன் நிறைவேற்றி வைக்கிறாள். பக்தர்கள் தங்கள் வீட்டுச் சுபகாரியங்களை இந்த சந்நிதியில் வைத்து நடத்துகின்றனர்.
மகா மண்டப வடபுறம் அம்பலவாணர் சந்நிதி உள்ளது. ஆண்டுக்கு ஆறுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறுகிறது.
மகாமண்டபம் தென்புறம் வாசல் உள்ளது. அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் உள்ளன.
கருவறை மூலவராக சாந்நித்திய மிக்க தெய்வமாக அருள்மிகு திருக்கடுக்கை மூன்றீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார். சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, ஐப்பசி பௌர்ணமி எனஆண்டுக்கு இருமுறை இப்பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுவது சிறப்பு. தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பெருமாள், துர்கை சந்நிதிகள் உள்ளன.
உள்சுற்றில் ஜுரதேவர், மீனாட்சி, சொக்கநாதர், இரட்டை விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், கால பைரவர், நவகிரகம், சூரியன், சந்திரன், அதிகார நந்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பரிவார தேவதை சந்நிதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் கல்யாண விநாயகர் சந்நிதி உள்ளது. தல விருட்சம் வில்வம். மூலவர் விமானம் நாகர வடிவில் உள்ளது.
தினமும் இரு கால பூசை நடைபெறுகிறது. பிரதி ஆங்கில மாதம் தோறும் இரண்டாம் ஞாயிறு அன்று அடியார்களால் திருவாசக முற்றோதல் மற்றும் உழவாரப் பணி நடத்தப்படுகிறது.
வைகாசி விசாகத்தையொட்டி திருவிளக்கு பூஜை, ஆடிப் பூரத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறும். தை அமாவாசையன்று பத்திர தீபம், தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடத்தப்படுகிறது. மாசிப் பெருந்திருவிழா 11 நாள்கள் நடைபெறும். அதில் 9}ஆம் திருநாளில் தேரோட்டம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசியில் சுவாமி}அம்பாள் திருக்கல்யாணம், கந்த சஷ்டி 7 நாள் உற்சவம், கார்த்திகை மகா தீபம், மார்கழி 30 நாட்கள் திருப்பள்ளியெழுச்சி, மற்றும் 10 நாள்கள் திருவாதிரைத் திருவிழா, மகா சிவராத்திரி விழா என பல விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
தரிசனத்துக்காக காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரையும்; மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் பாப்பாக்குடி சிவாலயம், திருநெல்வேலி } கடையம் நெடுஞ்சாலையில் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- வெ. கணேசன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.