வில் வளைத்த விநாயகர்
அற்புத வடிவாகத் திகழும் வில் வளைத்த விநாயகப் பெருமான் பற்றி...
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையமும் ஒன்று. இதை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் தமிழிலும், வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இவர்கள் "கச்சி' என்னும் அடைமொழியை உடைய பெயரையும், "காலாட்கள் தோழ உடையார்' என்னும் பட்டப் பெயரையும் பெற்று விளங்கினர். "தமிழ்த் தாத்தா' எனப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையர் குடும்பத்தினர் உடையார்பாளையத்தின் ஆதரவைப் பெற்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள் போன்ற கோயில்களில் சிறப்பான வழிபாட்டுக்கும் விழாக்களுக்கும் பாளையக்காரர்கள் தானம் அளித்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. உடையார்பாளையத்தில் பழைமையான கோயில் உள்ளது. பத்ராண்யம், முற்கபுரி போன்ற சிறப்புப் பெயர்களும் கொண்ட இத்தல இறைவன் "பயறணி நாதர்' எனவும், இறைவி "நறுமலர் பூங்குழல் நாயகி' எனவும் அழைக்கப்படுகின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் கோபுர வாயிலுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தக் கோயிலில் விநாயகர் "வில் வளைத்த விநாயகர்' என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.
Advertisement
Advertisement
சிறிய வடிவம்தான். தனது நான்கு கரங்களில் மேற்கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில் வில்லை வளைத்தும் பிடித்துக் கொண்டிருக்கிறார். அற்புத வடிவம்.
அர்ஜுனனுக்கு காண்டீபம் என்ற வில்லை வளைத்துத் தந்தமையால் "வில் வளைத்த விநாயகர் என வழங்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது.
கோயிலுக்கு அருகிலேயே வில் வடிவத்தில் குளம் அமைந்துள்ளது. அர்ஜுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப்பட்டதால் இது "காண்டீப தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.
உடையார்பாளையம் ஜமீன் சமஸ்தானத்தால் கோயில் புதுப்பிக்கப்பட்டு அண்மையில் குடமுழுக்கும் நடைபெற்றது. காண்டீபத் தீர்த்தக் குளத்தில் விநாயகரின் உற்சவத் திருமேனி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள, தெப்ப உற்சவமும் கோலாகலமாக நடைபெற்றது. வேண்டியதை அருளும் இவ்விநாயகப் பெருமானை பக்தர்கள் சிறப்பாகப் போற்றி வழிபடுகின்றனர்.
அற்புத வடிவாகத் திகழும் வில் வளைத்த விநாயகப் பெருமானை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறுவோம்.
அரியலூர் மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உடையார்பாளையம் அமைந்துள்ளது.
கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.