FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சோழர்கள் கலையில் புள்ளமங்கை கோயில்!

சப்தமாதர் வழிபட்ட திருத்தலமாக விளங்கும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்..

18 செப்டம்பர் 2026, 12:48 pm IST
பிரம்மபுரீஸ்வரர் கோயில்
பகிர்:

முதலாம் பராந்தகச் சோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பாக விளங்குகிறது, புள்ளமங்கை அருள்மிகு செளந்தரநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயில். தேவாரப் பாடல் பெற்ற, காவிரி தென்கரைத் தலங்களில் 16}ஆவது சிவத்தலம்.

பிரம்மா பூஜை செய்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் என்பதால், இறைவன் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு ஆலந்துறைநாதர், பசுபதிநாதர் என்றும், இறைவிக்கு அல்லியங்கோதை என்ற வேறு பெயர்களும் உள்ளன.

இக்கோயிலில் 21 தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அதிலொன்றில் "புள்ளமங்கை திருக்கோயில்' என்றும், "புள்ளமங்கலத்து திருவாலந்துறை மகாதேவர் என்பதால் ஆலந்துறைநாதர்' என்றும் சொல்லப்பட்டுள்ளது. "புள்ளமங்கை கோயில்' என்றே பிரபலமடைந்திருக்கிற இக்கோயிலில் ராமாயணத்தில் இடம்பெறும் ராமர், சீதாதேவி மற்றும் விசுவாமித்திரரின் கதையம்ச சிற்பங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.

Advertisement

Advertisement

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த திருத்தலம் இது என்று தலவரலாறு கூறுகிறது. சப்தமாதர் வழிபட்ட ஏழு கோயில்களில் இதுவும் ஒன்று. காவிரி குடமுருட்டி ஆற்றின் தென்கரைப் பகுதியில் வெள்ளாளர் பசுபதி கோயில்களில் (ஏழு பசுபதி கோயில்கள்) ஒரு கோயிலாகவும் விளங்குகிறது.

முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907}955) காலத்தில் இக்கோயிலுக்கான கருவறை மற்றும் அர்த்த மண்டபம் எழுப்பப்பட்டு திருப்பணி செய்துள்ளது தெரிய வருகிறது.

முதலாம் ராஜராஜ சோழன் கல்லணைக்குச் செல்லும்போது மதிய சாப்பாட்டு வேளையில் இவ்வழியாக வந்திருந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தார். அப்போது துர்கையம்மன் சிற்பத்தைப் பார்த்து வியந்திருக்கிறான்.

பொன்னியின் செல்வன் கதையை கல்கி எழுதுவதற்கு முன்னர் இங்குள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரம் தோற்றத்துக்குரிய சிற்பத்தைப் பார்த்துவிட்டு தான் கதையை எழுதியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கிராமத்துக்குள் அமைதியான சூழலில் அமைந்திருக்கிற கோயில். நுழைவு வாசலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலை கொண்டது. உள்ளே மிகவும் நீண்ட அமைப்பில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறை உள்ளது.

இறைவன் ஆலந்துறைநாதர் எனும் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்கத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். அவரது சந்நிதிக்கு முன்பு துவார பாலகர்கள் இருவரின் தலைக் கிரீடம், முகத்தில் புன்னகை, நெற்றிப் பொட்டு, காதில் தொங்கட்டான், கைகளில் வளையங்கள், உடல் வளைத்து நிற்கின்ற தோரணை, உடையழகு, ஆபரணங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.

இறைவி அல்லியங்கோதை அம்பாள் எனும் செüந்தரநாயகி அம்மன் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். மகாமண்டபத்தில் நடுவே இறைவனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கிறார். அருகே நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் நால்வர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேசுவரர் மற்றும் துர்கையம்மன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். தலவிருட்சம் ஆலமரம்.

தஞ்சாவூர் புள்ளமங்கை கோயில் என்றாலே சிற்பங்கள்தான். அதற்கேற்றாற்போல் செவ்வண்ணத்தில் மிளிரும் பற்பல சிற்பங்கள்."இத்தனை நேர்த்தியாகச் செதுக்கமுடியுமா?' என்கிற வியப்பும், பிரமிப்பும் ஏற்படுகிறது.

* விசுவாமித்திரர் ராமபிரானுக்கும், லட்சுமணனுக்கும் வில்வித்தை கற்றுத்தரும் தத்ரூபமான காட்சி.

* கங்கை நதியில் படகில் கடக்க குகன் ராமன் சீதை, லட்சுமணனை கூட்டிச் செல்வது, வாலி மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனைச் சுற்றி அழும் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் காட்சிகள்.

* ஜானகி ஜனனம், தாடகை வதம், சீதா கல்யாணம், வாலி - சுக்ரீவன் சண்டையிட்டுக் கொள்வது, விபீஷணன் பட்டாபிஷேகக் காட்சிகள் அளப்பரியது.

* ராவணன் சீதையைக் கடத்திச் சென்ற தகவலை ராமனிடம் ஜடாயு சொல்லும் சோகமான காட்சி மற்றும் ஜடாயு ராவணனை வழிமறித்துப் போரிடுவது போன்ற காட்சிகள்.

இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் கொண்ட கோயில். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நிர்வகிக்கிற இக்கோயிலில் தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. சிவாலயத்துக்குரிய அனைத்து விசேஷங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

தரிசனத்துக்காக காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும் திறந்திருக்கும் இக்கோயில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

- மதுரை ஆர்.கணேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments