பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியிட்ட விடியோக்களின் மூலம் அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக அறியப்பட்டார்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூன் 2) திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் சனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சனா ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். பின்னர், அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சும்பல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து, சனாவின் தாயார் உள்ளூர் ஊடகங்களில் கூறுகையில், கையில் துப்பாக்கியுடன் தங்களது வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் தனது மகளைக் கொலை செய்யும் நோக்கத்தோடு அவரை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில், கொலையை நேரில் கண்ட சாட்சிகளாக, சனாவின் தாயார் மற்றும் அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சனாவின் தாயார் அளித்த அடையாளங்களின் அடிப்படையில், சந்தேகப்படும்படியான நபர் ஒருவரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சிலர் இந்தக் கொலையானது சனாவின் வீட்டில் திருட முயன்ற 2 திருடர்களால் நடத்தப்பட்டது என்றும்; சிலர் அந்தப் பெண்ணுடன் நண்பராக முயற்சித்த 22 வயதுடைய நபர் ஒருவரே சனாவை கொலை செய்தார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட சனாவை, டிக்டாக்கில் 8 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பேரும் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.