சமூக ஆர்வலரும், அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனருமான சார்லி கிர்க் கொலை செய்யப்பட்டது கொடூரமான படுகொலை என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்காவின் திருப்புமுனை என்ற அமைப்பின் நிறுவனரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளத் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சார்லி கிர்க், அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர். டிரம்பின் பல கொள்கைகளுக்கு இவர் உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், ட்ரூத் என்ற சமூக வலைத்தளத்தில், விடியோ மூலம் தன்னுடைய அதிருப்தியை டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிகவும் துக்ககரமான மற்றும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சார்லி கிர்க்கின் படுகொலை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லட்சக்கணக்கானவர்களின் வழிகாட்டியாக இருந்தவர் சார்லி கிர்க். இன்று அவரைத் தெரிந்த, அவருடன் இருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து திறந்த விவாதத்துக்காகவும், தான் மிகவும் நேசித்த இந்த அமெரிக்காவுக்காகவுமே தன்னுடைய வாழ்வை அவர் அர்ப்பணித்திருந்தார்.
உண்மை மற்றும் சுதந்திரத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார், இளைஞர்களிடையே இவரைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு புகழ்பெற முடியாது.
உண்மை மீது அதிக நம்பிக்கைக் கொண்டிருந்தார் சார்லி. அவர் தற்போது சொர்க்கத்தில் கடவுளின் அருகில் அமைதியாக இருப்பார் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில், கிர்க்கின் மனைவி மற்றும் குழந்தைகளை கடவுள் நிச்சயம் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், அவர்கள் இப்போது இதயம் நொறுங்கி கடும் வலியை உணர்ந்திருப்பார்கள்.
இது அமெரிக்காவுக்கு இருண்ட காலம் என்று டிரம்ப் கூறி, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.