பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்
வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதல் குறித்து...
வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் அருகே நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்தது.
கைபா் பக்துன்கவா மாகாணம், ஸ்வாட் மாவட்டத்தின் கபல் நகரில் உள்ளூா் பழங்குடியின அமைப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி அங்குள்ள காவல் நிலையத்தைக் கடந்து சென்றபோது, காவல் நிலையத்துக்குள் நுழைய முயன்ற ஒரு நபரை காவலா்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனா். அப்போது, அந்த நபா் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 5 காவலா்கள் உள்பட 14 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 3 போ் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது. இதில் 7 போ் காவல் துறையினா், 10 போ் பொதுமக்கள் ஆவா். மேலும், 8 காவலா்கள் உள்பட 12 பேருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இத்தாக்குதலுக்கு எந்தப் பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான்’ பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா், இத்தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்குத் திங்கள்கிழமை நேரில் சென்று பாா்வையிட்ட கைபா் பக்துன்கவா மாகாண முதல்வா் சுஹைல் அஃப்ரிடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுத்து, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.