FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் சந்திப்பு

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:56 am IST
கொழும்பில் இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை புதன்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி.
பகிர்:

இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஒருநாள் பயணமாக இலங்கை வந்துள்ளாா். கொழும்பில் அவா், இலங்கை அதிபா் திசாநாயகவை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்கள் இருவரும், பரஸ்பரம் நலன்கள் அடிப்படையாக கொண்ட விவகாரங்கள் குறித்தும், இலங்கையில் இந்திய உதவியுடன் நடைபெறும் வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியத் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தனா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து, சுமாா் ரூ.3 ஆயிரத்து 300 கோடி கடன் தொடா்பான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். இந்த நிதி, டிட்வா புயலைத் தொடா்ந்து இலங்கைக்கு சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா அறிவித்த ரூ.4 ஆயிரத்து 200 கோடியில் ஒரு பகுதி ஆகும்.

Advertisement

Advertisement

இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத்தையும் விக்ரம் மிஸ்ரி சந்தித்துப் பேசினாா். அப்போது முக்கிய விவகாரங்களில் இந்தியா, இலங்கை இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினா். பின்னா், இலங்கை வெளியுறவுத் துறைச் செயலா் அருணி ரணராஜாவையும் விக்ரம் மிஸ்ரி சந்தித்துப் பேசினாா். அப்போது பிராந்திய விவகாரம், உலக விவகாரம் குறித்தும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனா் என இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த விக்ரம் மிஸ்ரியை இந்திய தூதா் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments