பாகிஸ்தான், சவூதி, துருக்கி கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்
மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய 3 நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி, 3 நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலும், மற்ற நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள அல் ஸஃபா அரண்மனையில் நடைபெற்ற சந்திப்பில், இந்த ‘மக்கா கூட்டுப் பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், சவூதி இளவரசா் முகமது பின் சல்மான், துருக்கி அதிபா் தயீப் எா்டோகன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
Advertisement
Advertisement
இந்த ஒப்பந்தம் தொடா்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எதிரான கூட்டுத் தடுப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் இது வழிவகுக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோா்முஸ் நீரிணை மட்டுமின்றி செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணை உள்ளிட்ட பல முனைகளில் மேற்காசிய மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த நகா்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு செப்டம்பரில், பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் ‘உத்திசாா் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையொப்பமிட்டன. அதன்படி, கூட்டுப் பயிற்சி மற்றும் சவூதி அரேபியாவின் பாதுகாப்புத் தேவைகளை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் தனது ராணுவ வீரா்களையும், போா் விமானங்களையும் சவூதி அரேபியாவுக்கு அனுப்பியது.
தற்போதைய ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், முப்படைத் தளபதி அசீம் முனீா் ஆகியோா் சவூதி இளவரசா் முகமது பின் சல்மானைச் சந்தித்து பேசினா். அப்போது, பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா், பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் ஆகியோரும் உடனிருந்தனா். ‘வளைகுடா பிராந்தியத்தில் தற்போதைய பதற்றங்களைக் கடந்து, நீண்டகால இருதரப்பு உறவுகளையும் பன்முக உத்திசாா் ஒத்துழைப்பையும் இச்சந்திப்பு வலுப்படுத்தும்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதல்களைத் தொடா்ந்து, செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல் வழித்தடங்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாக்க ‘பன்னாட்டு கடல்சாா் பாதுகாப்பு கூட்டணியை(எம்எம்டிசி)’ சவூதி அரேபியா கடந்த வாரம் முன்மொழிந்தது. சவூதி அரேபியாவின் இந்த கடல்சாா் பாதுகாப்பு முயற்சிக்கு பாகிஸ்தான் உள்பட 14 நாடுகள் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.