அல்-காய்தா ஊடுருவல்: ஐ.நா. அறிக்கைக்கு வங்கதேசம் மறுப்பு
‘வங்கதேசத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு தனது தளங்களை அமைக்க முயற்சிப்பதாக வெளியான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை, வெறும் யூகத்தின் அடிப்படையிலானது’ என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
‘வங்கதேசத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு தனது தளங்களை அமைக்க முயற்சிப்பதாக வெளியான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை, வெறும் யூகத்தின் அடிப்படையிலானது’ என்று அந்நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச உள்துறை அமைச்சா் சலாவுதீன் அகமது செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘இந்த அறிக்கையை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை; யூகத்தின் அடிப்படையிலேயே அந்த அறிக்கை அமைந்துள்ளது. எனவே, இந்த அறிக்கை மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை’ என்றாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267’ தடைகள் குழுவிடம் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழு சமா்ப்பித்த 38-ஆவது அறிக்கையில், ‘இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அல்-காய்தா அமைப்பு, வங்கதேச சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, அங்கு தனது பயங்கரவாதத் தளங்களை அமைக்க முயற்சிக்கிறது. மேலும், சிறிய மற்றும் பரவலான குழுக்களாகப் பிரிந்து செயல்படும் இந்த அமைப்பு, கடந்தாண்டு நவம்பரில் தில்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதலுக்கும் பொறுப்பாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இவ்விவகாரம் குறித்து வங்கதேச காவல்துறை கூறுகையில், ‘அல்-காய்தா ஊடுருவல் குறித்து எந்தவொரு குறிப்பிட்ட தகவலும் எங்களிடம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்ற இடைக்கால ஆட்சியின்போது வங்கதேசத்தின் பயங்கரவாதத் தடுப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக பெயா் வெளியிட விரும்பாத வங்கதேச பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடைக்கால ஆட்சியின்போது அனுபவம் வாய்ந்த காவல் குழுக்கள் பலவீனமடைந்ததாகவும், பிணையில் விடுவிக்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபா்கள் மீதான கண்காணிப்பு குறைக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
இதனிடையே, காவல் துறையினா் தங்களையும், தங்கள் வாகனங்களையும் பாதுகாத்துக் கொள்ள நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வங்கதேச அரசு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.