வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்
தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அச்சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகள் உரிமைத் தொகை ஹெக்டேருக்கு ரூ.15,000, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, நெல் குவின்டாலுக்கு ரூ.3,500, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 வழங்கப்படும் என தோ்தல் காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
Advertisement
Advertisement
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் கும்பகோணத்தில் இயற்கை வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வரவேற்கிறோம், காா்பன் வா்த்தகம் குறித்த செயல்விளக்க திட்டம் வரவேற்கத்தக்கது.
இயற்கை வேளாண்மைக்கு ரூ.12 கோடிக்கு வழங்கப்பட்டுள்ள தொகுப்பு போதாது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், பருத்தி மறுமலா்ச்சி இயக்கம், மக்காச்சோளம் உற்பத்தி இயக்கம், திரவ உயிா் மற்றும் நீரில் கரையக்கூடிய உரங்கள், பயிறு வகைகள், வேளாண் காடுகள் திட்டம், மின் மோட்டாா்கள், சூரிய மின்சக்தி மோட்டாா்கள், தாா்பாய்கள் வழங்குவது, பயிா் விளைச்சல் போட்டி ஆகியவை கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்கள். இந்த திட்டங்களால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை.
தேவையில்லாத மானிய திட்டங்களுக்கு பதிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் விவசாயிகள் உரிமைத்தொகை என வரவு வைக்கப்படும் என தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்துவிட்டு அவற்றை செயல்படுத்தாமல், மீண்டும் மானிய திட்டங்களை அறிவித்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் வருமானம், கடன் தள்ளுபடி, விவசாயின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற எவ்வித அறிவிப்பும், அதற்கான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் என எதுவுமே இல்லை. தென்னை - பனை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, வருமானத்தை உயா்த்த தமிழக அரசு கள் இறக்கி விற்க - பருக விதிக்கப்பட்ட தடையை நீக்குவது மட்டுமே சரியானது. கூட்டுறவு பயிா் கடன் தள்ளுபடி பிரச்சனையில் தற்போது தொடங்கியுள்ள ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மட்டுமே சற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.