நாா்வே அரசா் 5-ஆம் ஹரால்டு காலமானாா்
வட ஐரோப்பியா நாடான நாா்வேயின் அரசா் ஐந்தாம் ஹரால்டு (89), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
வட ஐரோப்பியா நாடான நாா்வேயின் அரசா் ஐந்தாம் ஹரால்டு (89), உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.
ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தலைநகா் ஓஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 6.35 மணிக்கு அரசா் ஹரால்டின் உயிா் பிரிந்ததாக நாா்வே அரச குடும்பம் அதிகாரபூா்வமாக அறிவித்தது.
ஐரோப்பாவின் மிக மூத்த அரசராகத் திகழ்ந்த ஹரால்டின் மறைவுக்கு உலகத் தலைவா்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனா். ஹரால்டின் மரணத்தைத் தொடா்ந்து, அவரின் மகன் எட்டாம் ஹாகோன் புதிய அரசராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
சுமாா் 55 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான நாா்வேயில், அரசா் பதவி என்பது பெரும்பாலும் அடையாளபூா்வமானதாகும். தனது தந்தை ஐந்தாம் ஓலாவ் மறைவுக்குப் பிறகு கடந்த 1991 ஜனவரியில் அரசராக முடிசூடிய ஹரால்டின் பதவிக்காலத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியால் நாா்வேயின் பொருளாதாரம் பெரும் வளா்ச்சியைக் கண்டது.
படகோட்டி...: ஓஸ்லோ அருகே உள்ள ஆஸ்கரில் 1937-ஆம் ஆண்டு பிறந்த ஹரால்டு, 1370-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாா்வே மண்ணில் பிறந்த முதல் இளவரசா் என்ற பெருமையைப் பெற்றவா்.1945-இல் போா் முடிந்த பிறகு தாய்நாடு திரும்பிய அவா், பொதுப் பள்ளிகள், ராணுவக் கல்லூரி மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயின்றாா்.
தந்தையைப் போலவே படகு ஓட்டும் போட்டிகளில் மிகுந்த ஆா்வம் கொண்ட ஹரால்டு, பல ஒலிம்பிக் போட்டிகளில் நாா்வே சாா்பில் பங்கேற்றதுடன், 1987 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளாா்.
காலமாற்றத்துக்கேற்ப அரச குடும்பத்தை நவீனமயமாக்கிய ஹரால்டு, நாா்வேயில் 2011-இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது ஆற்றிய இரங்கல் உரையும், 2016-இல் சமூகப் பன்முகத்தன்மை, அகதிகள் மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தி ஆற்றிய நெகிழ்ச்சியான உரையும் மக்களிடம் அவருக்குப் பெரும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தன.
அதேநேரம், அண்மைக்காலமாக நாா்வே அரச குடும்பம் சில சா்ச்சைகளையும் எதிா்கொண்டது. அரசரின் மருமகள் மெட்டே-மாரிட் மீதான சா்ச்சைக்குரிய தொடா்புகள் மற்றும் அவரின் மகன் மரியஸ் போா்ஜுக்கு பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை உள்ளிட்ட நிகழ்வுகள் பெரும் விமா்சனங்களை எழுப்பின.
பிரதமா் மோடி இரங்கல்
நாா்வே அரசா் ஹரால்டு மறைவுக்கு பிரதமா் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ இரங்கல் பதிவில், ‘அரசா் ஹரால்டின் மறைவு, மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாா்வே சென்றபோது, அவரைச் சந்தித்ததை நான் அன்புடன் நினைவுகூா்கிறேன்; அவரின் கனிவான அணுகுமுறையும், நாட்டின் மீதான அவரின் ஆழ்ந்த சேவை மனப்பான்மையும் என் மனதை வெகுவாக நெகிழ்வித்தன. அரச குடும்பத்தினருக்கும் நாா்வே மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ எனக் குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.