வைரலாகும் குரங்குக் குட்டி! தனிமையில் வாடுவதற்கு மனிதர்களே காரணம்?
ஜப்பானில் தாயால் கைவிடப்பட்ட குட்டிக் குரங்கு, பொம்மையுடன் தனிமையில் இருப்பதற்கு மனிதர்களே காரணம் என்பது குறித்து...
ஜப்பான் விலங்கியல் பூங்காவில் தாயால் கைவிடப்பட்ட குரங்குக் குட்டி, பொம்மையை அரவணைத்தபடி இருக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பூங்காவில் மற்ற குரங்குகள் குட்டிக் குரங்கை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், பூங்கா நிர்வாகி பொம்மையைக் கொடுத்துள்ளார். அந்த குரங்கு பொம்மையிடம் தாயின் அரவணைப்பைத் தேடியவாறு, அதனுடன் குட்டிக் குரங்கு விளையாடி வருகிறது. பலரால் கைவிடப்பட்ட தனிமையின் வலி மிகவும் கொடூரமானது என இந்த விடியோ உலகம் முழுவதும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஜப்பானின் இச்சிகாவா நகரத்திலுள்ள பூங்காவில், 2026 ஜூலை 25 ஆம் தேதி குரங்கு ஒன்று பிறந்துள்ளது. இக்குரங்குக்கு பஞ்ச் எனப் பெயரிடபட்டது. இக்குரங்கின் தாய் முதல்முறை குட்டியை ஈன்றுள்ளது. இதனால் குட்டியைக் கையாளும் திறன், தாய் குரங்கிற்கு குறைவாகவே இருந்துள்ளது.
Advertisement
Advertisement
பொதுவாக குட்டிக் குரங்குகள் தாயை கட்டியணைத்தபடியே இருக்கும். தன்னுடைய தோல் வலுவடைவதற்காக குரங்குக் குட்டிகள் இவ்வாறு செய்கின்றன.
ஆனால், இச்சிகாவா நகரம் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்தது. கட்டடங்களும் நெருக்கமாக இருந்ததால், பகலில் உள்வாங்கப்பட்ட வெப்பம் இரவில் அனலாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் இரவிலும் புழுக்கம் இருந்துள்ளது. இவை விலங்கியல் பூங்காவில் இருந்த உயிரினங்களையும் பாதித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், முதல் முறை குழந்தை ஈன்ற தாய் குரங்கு, நீரிழப்பு ஏற்பட்டு குட்டியை விட்டுப் பிரிந்துள்ளது. தாயை இழந்த குட்டிக் குரங்கு, மற்ற குரங்குகளிடம் சென்றபோது, அவையும் ஏற்றுக்கொள்ள மறுத்து அடித்துள்ளன.
குரங்குகளுக்கு உணவளிக்கச் செல்லும்போது பூங்கா ஊழியரின் கால்களைப் பற்றிக்கொண்டு குட்டிக் குரங்கு இறங்க மறுத்துள்ளது. அப்போதுதான் மற்ற குரங்குகள், குட்டியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குட்டிக்கு குரங்கு பொம்மை ஒன்றை ஊழியர் அளித்துள்ளார். அந்த பொம்மையை தாய் என நினைத்து அதனை கட்டியணைத்தபடி குட்டி இருந்துள்ளது.
அதற்கு உயிர் இல்லை என்பதை உணராத குட்டி, தன்னை கட்டியணைக்கும்படி பொம்மையிடம் பல முயற்சிகளைச் செய்து தோல்வி அடைந்துள்ளது. எங்குச் சென்றாலும் பொம்மையை தன்னுடனேயே அழைத்துச் சென்றுள்ளது. இதனை பூங்கா பார்வையாளர்கள் விடியோ எடுத்துப் பதிவிட்டுள்ளனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தனிமையின் வலி மிகவும் துயரமானது என பலரும் இந்த விடியோவை குறிப்பிட்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த மாதம், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக மலையை நோக்கி நடந்துச்சென்ற பென்குயின் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது பொம்மையுடன் தனிமையில் இருக்கும் குரங்குக் குட்டியின் விடியோ வைரலாகி வருகிறது.
மனிதர்களே காரணம்
இச்சிகாவா நகரத்தில் கட்டடங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளன. இதனால், பகலில் அதிக அளவிலான வெப்பம் ஈர்க்கப்படுகிறது. உள்வாங்கப்பட்ட வெப்பம் இரவில் வெளியேற்றப்படுவதால், புழுக்கமான சூழலே நகரத்தில் நிலவுகிறது. இயல்பு நிலையை விட, (31 - 32 டிகிரி செல்சியஸ்) கூடுதல் வெப்பநிலை நகரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூங்கா அருகிலுள்ள பகுதிகள் கூட பெருமளவு மரங்கள் வெட்டப்பட்டு கட்டடங்களாகவே இருப்பதால், பூங்காவிற்குள்ளும் இரவில் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விலங்குகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குரங்குக் குட்டி, தாய் குரங்கை கட்டியணைத்தபடி இருப்பதால், அதிக புழுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வாறே இருந்ததால் தாய் குரங்கிற்கு நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்முறை குட்டியை ஈன்ற தாய் குரங்கிற்கு, இந்தச் சூழலை கையாள முடியாமல், குட்டியை விட்டுச் சென்றுள்ளது.
குட்டிக் குரங்கும் பிறந்த சில மாதங்களுக்கு தாய் குரங்கை கட்டியணைத்தபடியே இருக்கும். உடல் தசைகள் வலுவடைவதற்காகவும் பாதுகாப்பாக உணர்வதற்காகவும் அவை அவ்வாறு செய்யும். ஆனால், தாய் குரங்கு விட்டுச்சென்றதால், குட்டிக் குரங்கிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
video of a baby monkey abandoned by its mother at a Japanese zoo cuddling a toy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.