வெனிசுவேலா ராணுவம் மண்டியிட்டதாகவும், அதிபர் மதுரோ நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று(ஜன. 3) காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்தது. இதனால், உலகளாவிய பதற்றம் ஏற்பட்ட நிலையில், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்தார். இது உண்மைதானா? இல்லை தவறான தகவலா? என சந்தேகமும் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா முழுவதும் பரபரப்பான சூழலில், அரசு தொலைக்காட்சியின் மூலம் அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், “அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு எங்களுக்கு ஆதாரம் வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், முதலில் மதுரோவில் கைகள் கட்டப்பட்டு, கண்கள் மற்றும் காதுகள் மூடப்பட்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “சட்டவிரோதியான வெனிசுவேலா அதிபர் மதுரோவை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம். புதிய அரசு தேர்ந்தெடுக்கும் வரை வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்.
புதிய ஆட்சி அமைந்தால், பல ஆண்டுகளாக இருந்த அமைதியான சூழல் ஏற்படும். வெனிசுவேலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதி வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.