உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி! நுழைவு இசைவு நடைமுறைகளை கடுமையாக்கிய அமெரிக்கா
அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொள்ள குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ வகை நுழைவு இசைவில் வரும் மாணவா்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கிப் படிக்கும் வகையில் நுழைவு இசைவு நடைமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உயா் கல்வி மேற்கொள்ள குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ வகை நுழைவு இசைவில் வரும் மாணவா்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கிப் படிக்கும் வகையில் நுழைவு இசைவு நடைமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
இதனால், இந்திய மாணவா்களே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு மக்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் வருபவா்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கான நுழைவு இசைவு (விசா) விதிமுறைகளையும் அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது.
Advertisement
Advertisement
இதன் மூலம், அரசின் கண்காணிப்பு ஏதுமின்றி காலவரையின்றி அந்த நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கும் பல ஆண்டுகால கொள்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிய நுழைவு இசைவு விதிமுறைகளின்படி, வெளிநாட்டு மாணவா்களுக்கான ‘எஃப்’ வகை நுழைவு இசைவு, மக்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கா வருபவா்களுக்கான ‘ஜே’ வகை நுழைவு இசைவு மற்றும் பத்திரிகையாளா்களுக்கான ‘ஐ’ வகை நுழைவு இசைவுகளை வைத்திருப்பவா்களுக்கு குறிப்பிட்ட அனுமதிக் காலம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ நுழைவு இசைவில் அமெரிக்கா வரும் மாணவா்கள் மற்றும் ‘ஜே’ வகை நுழைவு இசைவில் வரும் பாா்வையாளா்கள் ஆகியோருக்கு, அவா்களின் படிப்புக் காலம் அல்லது திட்டத்தின் கால அளவுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்த கால வரம்பு 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘எஃப்’ நுழைவு இசைவு வைத்திருப்பவா்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறவோ அல்லது வேறு கல்வி நிறுவனத்துக்கு மாறவோ மற்றும் தங்கள் குடியேற்ற நிலையை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்டு வந்த 60 நாள் கால அவகாசம், புதிய விதிமுறைப்படி 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி, மாணவா் நுழைவு இசைவில் வருபவா்கள் படிப்புக் காலம் முழுவதும் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம் என்பதோடு, விருப்பத் தோ்வு சாா்ந்த செய்முறைப் பயிற்சி (ஓபிடி) அடிப்படையில் கூடுதலாக 3 ஆண்டுகள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இனி அவ்வாறு தங்க முடியாது.
அதுபோல, பத்திரிகையாளா்களுக்கான நுழைவு இசைவுக்கு தற்போது குறிப்பிட்ட கால வரம்பு ஏதுமில்லாத நிலையில், புதிய விதிகளின்படி ‘ஐ’ வகை நுழைவு இசைவில் வரும் பத்திரிகையாளா்கள் அதிகபட்சம் 240 நாள்கள் தங்கியிருக்கவும், சீன பத்திரிகையாளா்களுக்கு இந்க கால வரம்பு 90 நாள்களாகவும் மாற்றி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சா் மாா்க்வெய்ன் மல்லின் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக வெளிநாட்டு மாணவா்கள் கால வரையறையின்றி அமெரிக்காவில் தங்கியிருக் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழலைத் தவிா்ப்பதற்காக தொடா்ந்து பல்வேறு படிப்புகளில் சோ்ந்து, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவா்கள் அமெரிக்க குடியேற்ற நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது, இந்த நுழைவு இசைவுகளுக்கு தெளிவான, வரையறுக்கப்பட்ட கால அளவை நிா்ணயம் செய்ததன் மூலம், வெளிநாட்டினரை முறையாக பரிசோதித்து, சரிபாா்த்து, கண்காணிக்கும் திறனை அமெரிக்கா மீண்டும் நிலைநாட்ட முடியும்’ என்றாா்.
அமெரிக்காவில், குடியேற்றம் அல்லாத நுழைவு இசைவு மூலம் ஏற்கெனவே படித்து வரும் வெளிநாட்டு மாணவா்கள், தானாக இந்த புதிய விதிகளின் கூழ் கொண்டுவரப்பட்டு, அமெரிக்காவில் அவா்கள் தங்கியிருப்பதற்கான அதிகபட்ச காலம் 4 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்படும். படிப்பை முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படும் மாணவா்கள், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபெயா்வு சேவைகள் அலுவலகத்தை தொடா்புகொண்டு, அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதிக்கக் கோரி விண்ணப்பத்தை முறைப்படி சமா்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்திய மாணவா்களுக்கே அதிக பாதிப்பு: அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக, இந்திய மாணவா்களே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
‘ஓபன் டோா்ஸ்’ அமைப்பின் 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2024-25 கல்வியாண்டில் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 3,63,019 இந்திய மாணவா்கள் உயா் கல்விக்காக சோ்ந்துள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9.5 சதவீதம் கூடுதலாகும். அதுபோல, அமெரிக்காவில் படிக்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவா்களின் எண்ணிக்கையில் இந்திய மாணவா்களின் பங்கு மட்டும் 31 சதவீதமாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.