பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல நேபாள மலையேற்ற வீரர் தலைமையிலான 10 பேர் மாயம்
பாகிஸ்தானின் மலைச்சிகரத்தில் நேபாள பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளது குறித்து...
இஸ்லாமாபாத்: வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான 'பிராட் பீக்' சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச மலையேற்ற வீரர்கள் 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
பாகிஸ்தான் பல முக்கிய மலைச்சிகரங்களைக் கொண்டுள்ளது; இங்குள்ள மலைச்சிகரங்களில் ஏறுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மலையேற்ற வீரர்கள் வந்து செல்கின்றனர்.
வட பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் (26,401 அடி) உயரத்தில் 'பிராட் பீக்' மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் நிலவும். இதன் காரணமாக, பனிச்சரிவும் ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வியாழனன்று (ஜூலை 30), நேபாள பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று, 'பிராட் பீக்' மலைச்சிகரத்தில் மலையேறத் தொடங்கினர். இந்தநிலையில், அங்கு நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான்' அமைப்பின் துணைத் தலைவர் கர்ரார் ஹைதரி வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'நிம்ஸ் டாய்' தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அதன்பிறகு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹைதரி தெரிவித்துள்ளார்.
நிம்ஸ் டாய் தலைமையிலான இந்த மலையேற்றக் குழுவில் ஐந்து நேபாள மலையேற்ற வீரர்கள், ஹன்சாவைச் சேர்ந்த பாகிஸ்தான் மலையேற்ற வீரர் சோஹைல் சகி, ஓமன் நாட்டைச் சேர்ந்த நதிரா, அமெரிக்காவைச் சேர்ந்த மல்லோரி கெய்ஸ், சீன மலையேற்ற வீரர் வாங் மற்றும் மற்றொரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் அடங்குவர் என்று ஹைதரி கூறியுள்ளார்.
அதிகாரப்பூர்வ உடனடி தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவற்காக, அந்த அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் மற்றும் மூத்த நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்து வருகின்றனர்.
வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப, ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆல்பைன் கிளப் ஆஃப் பாகிஸ்தான் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மலையேற்ற வீரர்களின் குடும்பங்கள் மற்றும் சர்வதேச மலையேற்றச் சமூகத்தினருடன் தாங்கள் உறுதுணையாக நிற்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த 'நிம்ஸ் டாய்' என்றும் அழைக்கப்படும் நிர்மல் புர்ஜா, 2019-ல் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் 189 நாள்களில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார். இவரது மலையேற்ற சாதனைகள் நெட்ஃபிக்ஸில் "14 Peaks: Nothing is Impossible" என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.
Ten international climbers led by a renowned Nepal-born mountaineer were missing after an avalanche struck Broad Peak, one of the world's highest mountains in northern Pakistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.