லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தல்! 2-ம் இடத்தில் தமிழ்ப் பெண்! யார் இந்த நித்யா ராமன்?
லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண் பற்றி...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான முதல்நிலைத் தேர்தலில் தமிழ்ப் பெண்ணான நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கான மேயர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் முதலிரண்டு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் பெரும்பாலானோர் தபால் வாக்குகள் மூலமே வாக்குகளை செலுத்திய நிலையில், அந்த தபால் வாக்குகள் தேர்தலுக்குப் பிறகு 7 நாள்கள் வரை பெறப்படுகிறது. இதனால், இறுதி முடிவை அறிவிக்க பல நாள்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
தற்போதைய லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயராக உள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 72 வயது கரேன் பாஸ், ஏற்கெனவே 34.7 சதவிகித வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.
இரண்டாம் இடத்துக்கான போட்டியில் கேரள பூர்வீகத்தை கொண்ட லாஸ் ஏஞ்சலீஸின் மாமன்ற உறுப்பினர் நித்யா ராமன் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டும் உள்ளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, இரண்டாம் இடத்தில் இருந்த பிராட்டைவிட சில வாக்குகள் அதிகம் பெற்ற நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளதாக சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 40 சதவிகித வாக்குகளை பெற்ற நித்யா ராமன், சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிராட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
நித்யா ராமன் யார்?
கேரளத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் 1981-ஆம் ஆண்டு பிறந்தவர் நித்யா ராமன் (வயது 45). இவருக்கு 6 வயது இருக்கும்போது, இவரது பெற்றோர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியலும், மசாசூசட்ஸ் பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டமிடலும் பயின்றுள்ளார். சென்னையில் துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி சில காலம் பணியாற்றியுள்ளார்.
பின்னர், 2013 -ல் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடிபெயர்ந்த இவர், வீடற்றவர்களுக்கு வீடுகளை கட்டித் தரும் ’செலா’ என்ற அமைப்பைத் தொடங்கி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் போன்ற அரசியல் தலைவர்களின் ஆதரவுள்ள வேட்பாளரை தோற்கடித்து, லாஸ் ஏஞ்சலீஸின் நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற சாதனை படைத்தார்.
இவர் மாமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலகட்டத்தில் நகர திட்டமிடலில் முக்கிய பங்காற்றினார். வீடற்றவர்களுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.
தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் பதவிக்கான முதல்நிலைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பகுதிவாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இறுதியாக முதலிரண்டு இடங்களைப் பிடிப்பவர்களே மேயர் தேர்தலில் நவம்பர் மாதம் போட்டியிடுவார்கள்.
நியூ யார்க் நகர் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியான மமதானியைப் போன்று, நித்யா ராமனும் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Los Angeles Mayoral Election : Tamil woman in second place - Who is Nithya Raman?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.