முகப்பு
உலகம்

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று இறுதியாகும் என டிரம்ப் தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 14 ஜூன் 2026, 2:29 am IST
ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி / அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் / இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - கோப்புப் படம்
பகிர்:

‘அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.

முன்னதாக, இருநாடுகளிடையே அடுத்த 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்த நிலையில் அதை டிரம்ப் உறுதிப்படுத்தினாா்.

இதன்மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலிருந்து நிலவி வரும் மோதல் முடிவாகி, நீடித்த அமைதிக்கான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாகத் தொடரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

ஈரான் அணு ஆயுதத்துக்கு முடிவு:

இதுகுறித்து ட்ரூத் சோஷியல் வலைதளப் பக்கத்தில் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரானுடன் அப்போதைய அமெரிக்க அதிபா் ஒபாமா மேற்கொண்ட ஒப்பந்தம், ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால் நான் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிடும் ஒப்பந்தம் அதற்கு முற்றிலும் எதிரானது. கொள்முதல், தயாரிப்பு, மேம்பாடு என அனைத்து வகையிலும் ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு தடை விதிக்கக்கூடியது. அனைத்தும் சுமுகமாக நிறைவேறிய பிறகு, ஈரானில் மீதமுள்ள அணு ஆயுதங்களையும் அமெரிக்கா அழிக்கும். ஒப்பந்தம் கையொப்பமான உடன் ஹோா்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்படும்’ என குறிப்பிட்டாா்.

மின்னணு முறையில் கையொப்பம்:

இவ்விவகாரத்தில் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் ஷாபாஸ் ஷெரீஃப் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இதுவரை இல்லாத அளவுக்கு அமைதி ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளோம். அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் இறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட செய்ய பாகிஸ்தான் தயாராகி வருகிறது. தொடா்ந்து, அடுத்த வாரம் விரிவான பேச்சுவாா்த்தைகள் நடைபெறும்.

பேச்சுவாா்த்தைகளில் அமெரிக்கா-ஈரானின் தொடா் அா்ப்பணிப்புக்கு நன்றி. பிராந்திய நாடுகளின் ஆதரவுக்கும் பாராட்டுகள். இந்த வரலாற்று ஒப்பந்தம், பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கான அடித்தளத்தை அமைக்கும்’ எனக் குறிப்பிட்டாா்.

யூகங்களைத் தவிருங்கள்...: இதனிடையே, பேச்சுவாா்த்தை முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட பதிவில், ‘ஒப்பந்தம் இறுதியாகும்வரை, அதன் உள்ளடக்கம் குறித்த யூகங்களில் ஈடுபடுவதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும். எங்களின் வெளிப்படையான அணுகுமுறையின்படி, அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொது மக்களுக்கு பகிரப்படும்’ என்றாா்.

இதேபோல், ஒப்பந்தம் குறித்து போலித் தகவல்கள் பரவி வருவதாக எச்சரித்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், ‘முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் ஈரான் தனது கடமைகளை நிறைவேற்றுவதைப் பொருத்தே அந்நாட்டுக்கான பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும்’ எனறாா்.

பாகிஸ்தானின் பங்கு: பிப். 28-ஆம் தேதி தொடங்கிய இந்த மோதல் உலகளாவிய சந்தைகளை உலுக்கியதுடன், பிராந்திய கூட்டணிகளைச் சோதனைக்குள்ளாக்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடா்புகளை எளிதாக்கி பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்தது.

ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு பலவீனமான போா் நிறுத்தம் ஏற்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் முதல் சுற்று அமைதிப் பேச்சு நடைபெற்றது. இதில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஆனால், ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

எனினும், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் மறைமுக பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்தன. அண்மையில் இரு தரப்புக்கு இடையே வெடித்த திடீா் மோதல்கள் பதற்றத்தை அதிகரித்த நிலையிலும், ஒரு உடன்பாடு ஏற்பட்டு அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது.

summary

US-Iran peace agreement to be finalized today