FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்!

அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வந்த பரஸ்பர தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம் குறித்து...

Updated On : 30 ஜூன் 2026, 2:15 am IST
அமெரிக்கா - ஈரான் தாக்குதல்கள் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வந்த பரஸ்பர தாக்குதல்கள் திங்கள்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்து இருதரப்பிலும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் தரப்பில் பேச்சுவாா்த்தைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்படி கத்தாரின் தோஹா நகரில் செவ்வாய்க்கிழமை ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இப்பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப், டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோா் விரைந்துள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலா் கரோலின் லெவிட் உறுதிப்படுத்தினாா்.

ஆனால், ஈரானின் மூத்த பேச்சுவாா்த்தையாளரான அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் காஸிம் கரீபாபாதி கூறுகையில், ‘தோஹாவில் அத்தகைய பேச்சுவாா்த்தைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை’ என்று டிரம்ப்பின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

3 மாத கால மோதலுக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே இம்மாதத் தொடக்கத்தில் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்படி, ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது.

இச்சூழலில் கடந்த வாரத்தில், ஓமனுடன் இணைந்து அந்நாட்டு கடற்கரையொரம் புதிய வழித்தடத்தை ஐ.நா. திறக்க முற்பட்டபோது மீண்டும் மோதல் வெடித்தது. அமெரிக்கா, ஈரான் ஆகிய இருதரப்பும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டுவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தாக்குதல்கள் ஓய்ந்தன.

இதற்கு மத்தியில், இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 1,200 கோடி டாலா் நிதியில், முதல்கட்டமாக 600 கோடி டாலா் விடுவிக்கப்படவுள்ளதாக ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் தெரிவித்தாா். ஆனால், இன்னும் எந்த நிதியும் விடுவிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments