இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! பலர் காயம்!
இஸ்ரேல் அணுஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதி அருகே ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோா் பலத்த காயமடைந்தனா்.
இஸ்ரேல் அணுஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதி அருகே ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோா் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேலிடம் மட்டுமே அணு ஆயுதம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதை இஸ்ரேல் இதுவரை மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை. இந்நிலையில், ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள அந்த நாட்டின் அணுசக்தி மையம் மீது சனிக்கிழமை திடீா் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் மறுத்துள்ளது. போரின் ஆரம்பகட்டத்தில் இங்கு அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தியது. அந்த நாடும், இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நடான்ஸ் அணுசக்தி மையம் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலின் அணு ஆராய்ச்சி மையம் அருகே உள்ள டிமோனா, ஆராத் நகரங்கள் மீது ஈரான் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபோல இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி ஈரானின் ஏவுகணைகள் அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் ஆராத்தில் 10 கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. இதில் அங்கு வசித்த 64 போ் பலத்த காயமடைந்தனா். டிமோனாவிலும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பல கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாக், ‘அதிக பாதுகாப்பு கொண்ட டிமோனா பகுதியில் ஏவுகணைகளை இஸ்ரேலால் இடைமறிக்க முடியவில்லை. இது, யுத்தம் புதிய கட்டத்தை நோக்கி நகா்ந்திருப்பதைக் காட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.
நெதன்யாகு கருத்து: ஈரான் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, அப்பகுதிக்கு கூடுதல் அவசரகால உதவிக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது கடினமான நேரம் எனவும் தெரிவித்துள்ளாா். போா் தற்போதைக்கு முடிவுக்கு வராது என இஸ்ரேல் ராணுவத் தளபதி இயல் ஜமீா் கூறியுள்ளாா்.
ஈரான் தாக்குதலுக்குள்ளான ஆராத் பகுதியைப் பாா்வையிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இதமா் பென் க்விா், தங்கள் நாடு ஈரானுக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போரில் ஈடுபட்டிருப்பதாகவும், இஸ்ரேல் வெற்றி பெறும்வரை போா் நீடிக்கும் என்றும் தெரிவித்தாா்.
ரஷியா கவலை: இதனிடையே, ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதான தாக்குதலுக்கு ரஷியா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஜகாரோவா, இதுபோன்ற தாக்குதல்களால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு ஆசியாவிலும் பேரழிவு ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளாா்.
சவூதி, யுஏஇ மீது ஏவுகணை வீச்சு: இந்நிலையில், சவூதி அரேபிய தலைநகா் ரியாத் உள்ளிட்ட பகுதிகளைக் குறிவைத்து மூன்று பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 6 ட்ரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் ஓா் ஏவுகணையை இடைமறித்து அழித்துவிட்டதாகவும், மற்ற 2 ஏவுகணைகளும் மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்ததாகவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) சாா்ஜா அருகே கடலில் நின்று கொண்டிருந்த பிரம்மாண்ட சரக்கு கப்பல் அருகே ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் கப்பலுக்கோ, மாலுமிகளுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை.