முகப்பு
உலகம்

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியவை...

Updated On : 30 மார்ச் 2026, 12:17 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
பகிர்:

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம். கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வழிகள் உள்ளன.

இதற்கு அர்த்தம், நாங்கள் அங்கே சிறிது காலம் தங்க வேண்டியிருக்கும் என்பதே. ஈரானிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் அதனை எளிதாகக் கைப்பற்றுவோம்” என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

கார்க் தீவில் ஏற்கனவே அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா தனது படைகளை இறக்கினால் வளைகுடா நாடுகளில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவோம் என ஈரான் எச்சரித்திருந்தது.

டிரம்ப் மேலும் பேசுகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அவைத் தலைவர் அனுமதி வழங்கியதாகக் கூறினார்.

ஈரானின் விவகாரங்களில் அவைத் தலைவர் காலிபாஃப்-ன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இதனை அவர் தெரிவித்தார்.

மேலும், ”ஈரான் எங்களுக்கு பாகிஸ்தான் கொடியேந்திய 10 எரிவாயு கப்பல்களை அளித்துள்ளது. இப்போது, மேலும் 20 கப்பல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர். அந்தக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்து கொண்டிருக்கின்றன. கலீபாஃப் இந்தக் கப்பல்களை நமக்கு அனுப்ப அனுமதியளித்துள்ளார்.

ஈரான் எனக்கு பரிசளிக்க உள்ளது என்று நான் சொன்னது நினைவிருக்கிறதா? அதற்கு அனைவரும் 'என்ன பரிசு?' எனக் கேட்டனர். தற்போது பரிசைப் பற்றித் தெரிந்ததும் அவர்கள் வாயை மூடிக்கொண்டனர். ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது” என டிரம்ப் பேசியுள்ளார்.

டிரம்ப் இப்படி பேசிய நிலையில், கலீபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து அமெரிக்கர்களை கேலி செய்யும் விதமாகவும் அச்சுறுத்தல் செய்யும் விதமாகவும் பதிவிட்டு வருகிறார்.

ஆனால், ஈரானில் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில் புரட்சிகரக் காவல் படையின் முன்னாள் படைத் தலைவரின் செல்வாக்கு அங்கு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

US could take Iran's Kharg Island very easily: Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.