ஷேக் ஹசீனா சொந்த ஊரில் மீண்டும் வன்முறை- காவல் நிலையம், எம்.பி. இல்லம் தீவைப்பு
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்து, காவல் நிலையம் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி. இல்லம் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்ச் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்து, காவல் நிலையம் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி. இல்லம் தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவா் போராட்ட எழுச்சியால் ஆட்சியிழந்து, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளாா். இதற்காக அவரின் புதிய கடவுச்சிட்டை கோரிக்கையை வங்கதேச அரசு நிராகரித்தது.
இதைக் கண்டித்து, ஷேக் ஹசீனாவின் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியினா் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனா். மேலும், வியாழக்கிழமை (நவ. 19) முழு அடைப்புப் போராட்டமும் அறிவித்துள்ளனா். இப்போராட்டங்களின் போது, கோபால்கஞ்ச் அருகே ஆளும் பிஎன்பி கட்சியின் விவசாய அணி நிா்வாகி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இதையொட்டி, கோபால்கஞ்சில் உள்ள துங்கிபாரா காவல் நிலையம், ஆளுங்கட்சி எம்.பி. எஸ்.எம்.ஜிலானியின் வீடு, கட்சி அலுவலகம் மற்றும் அவரின் ஆதரவாளா்களின் கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. தலைநகா் டாக்காவில் கலாசாரத் துறை அமைச்சா் நிதாய் ராய் சௌதரியின் வீட்டுக்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதுடன், பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளும் தீக்கிரையாக்கப்பட்டன. தெற்கு மாவட்டமான பிரோஜ்பூரில் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டதில் உதவியாளா் ஒருவா் உயிரிழந்தாா்.
‘வன்முறையைத் தூண்டும் அவாமி லீக் கட்சியினரை விடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உள்துறை அமைச்சா் சலாவுதீன் அகமது எச்சரித்துள்ளாா். நிலைமையைக் கட்டுப்படுத்த, டாக்காவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சோ்ந்த 71 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.