முகப்பு

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைப் பாருங்கள்: அமெரிக்க மத்திய வங்கியை விமர்சித்த டிரம்ப்!

இந்தியாவைப் போன்று வட்டி விகிதங்களைக் குறைத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை எட்டும் என டிரம்ப் பேசியுள்ளார்.

41 வினாடிகள் முன்பு
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைப்  பாருங்கள்: அமெரிக்க மத்திய வங்கியை விமர்சித்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி.
பகிர்:

இந்தியாவைப் போன்று வட்டி விகிதங்களைக் குறைத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை எட்டும் என டிரம்ப் பேசியுள்ளார்.

இந்தியாவின் 7% ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் குறைந்த வட்டி விகிதங்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் அதிகமாக உள்ளதாகவும் அது அரசியல் சார்ந்து செயல்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துப் பேசியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி மிகவும் அரசியல் சார்ந்து செயல்படுவதால் வட்டி விகிதங்கள் அதிகளவு உள்ளன. அதன் தலைமையை நான் குறை சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பே அரசியல் சார்ந்து செயல்படுகிறது.

Advertisement

Advertisement

பொருளாதாரம் சார்ந்து நல்ல முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் அவர்கள் வட்டி விகிதங்களை உயர்த்துகிறார்கள். குறிப்பிட்ட நோக்கத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள். உண்மையாக இதற்கு நேர்மாறான நடைமுறையையே அவர்கள் செயல்படுத்த வேண்டும்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “இந்தளவு சிறப்பான பொருளாதார முடிவுகள் இருக்கையில், தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தக் கூடாது. மாறாக, கடன் வாங்குவோருக்கான தகுதி மேம்பட்டுள்ளதால் வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டின் ஜிடிபி 4% ஆக இல்லாமல், 15 முதல் 20 சதவீதமாக உயரும். நாட்டின் கடனையும் விரைவில் அடைக்கலாம். இப்படி நடக்கவேண்டிய விஷயங்கள், தற்போது நேர்மாறாக நடக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசிய டிரம்ப், “இந்தியாவைப் பாருங்கள். அங்கு வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன. அதேநேரம், அவர்களின் ஜிடிபி வளர்ச்சி 7% ஆக உள்ளது. நாம் 14%, 15% ஏன் 20% ஜிடிபி வளர்ச்சியைக் கூட எட்டியிருக்க முடியும். நாம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது வருத்தமான விஷயம். உண்மை என்னவென்றால், நாம் அந்த இலக்குகளை எப்போதோ தாண்டிச் சென்றிருக்க முடியும்.

மற்ற நாடுகளின் வெற்றிக்குக் காரணமான நாடு நாம்தான். சில நாடுகள் தங்களை நிதி ரீதியாக மேம்பட்டார்களாக கருதுகின்றனர். ஆனால், நம்மைச் சார்ந்தே அந்த நாடுகள் அத்தகைய அந்தஸ்தைப் பெற்றுள்ளன. எனவே, வட்டி விகிதங்கள் நம்மிடம்தான் குறைவாக இருக்கவேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அமெரிக்காவில் பணவீக்கம், ஃபெடரல் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2% இலக்கை விட தொடர்ந்து அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Trump has said that the US economy could grow by 15 to 20 percent if interest rates were cut like India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.