நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் பலி 24 ஆக உயர்வு!
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்திருப்பது பற்றி..

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் தெற்கு பேயல்சா மாகாணத்தில் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் 24 பேர் பலியாகினர். படகில் எத்தனை பயணிகள் இருந்தார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிப்பதாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் மூசா முகமது தெரிவித்தார்.
பயணிகள் படகு ஓட்டுநரிடம் கரையோரமாகச் செல்லுமாறு கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் முகமது தெரிவித்தார். படகு ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், படகின் மேலாளர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடாமல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் மன்சோ எசெகி தெரிவித்தார். முன்னதாக ஆகஸ்ட் மாதம், வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாகாணத்தில் படகு மூழ்கியதில் 51 பேர் பலியாகினர்.
நைஜீரியாவின் பரபரப்பான ஆறுகள் மற்றும் நீர்வழிகளில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இவை பெரும்பாலும் அதிக பாரம் ஏற்றப்பட்ட படகுகள், மோசமான பராமரிப்பு அல்லது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.