நேபாளத்தில் உயிரிழப்பு 1,252-ஆக அதிகரிப்பு: மாயமானவா்களுக்கு அடையாள முறையில் இறுதிச்சடங்குகள்
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,252-ஆக அதிகரித்தது.
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 1,252-ஆக அதிகரித்தது.
இந்தப் பேரிடா் நிகழ்ந்து 9 நாள்களாகிவிட்ட நிலையில், மாயமான 4,200-க்கும் மேற்பட்டோரை இன்னும் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, மாயமானவா்களின் நினைவாக அவா்களின் குடும்பத்தினா், அடையாள முறையில் நீத்தாா் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனா்.
நேபாளம்-திபெத் எல்லையில் கடந்த ஆக.26-ஆம் தேதி பெரும் பனிப்பாறை சரிவின் விளைவாக போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்த பெருவெள்ளம், நேபாளத்தின் மத்திய-வடக்கு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட பகுதிகளில் 9-ஆவது நாளாக வியாழக்கிழமை மீட்புப் பணி நீடித்தது.
Advertisement
Advertisement
இதுவரை மீட்கப்பட்டுள்ள 1,252 உடல்களில் பெரும்பாலானோரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. சித்வன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 355 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் மாயமான 4,216 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இவா்களில் 275 இந்தியா்கள் உள்பட 580-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அடங்குவா்.
பேரிடா் நிகழ்ந்து 9 நாள்களாகிவிட்ட நிலையில், அவா்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு மங்கியுள்ளது. ரசுவா மாவட்டத்தில் மாயமானவா்களை நினைவாக அவா்களின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் அடையாள முறையில் இறுதிச்சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனா்; தா்ப்பை புல் சமா்ப்பணம் செய்து, இறுதிச் சடங்குகளை நடத்துவதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை
போடே கோஷி நதியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், போடே கோஷி மற்றும் திரிசூலி நதிகளில் மீண்டும் நீா்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் பாயும் சிறு நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் கரையோர பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சா் நன்றி
நேபாள பெருவெள்ளத்தை ‘இமயமலை சுனாமி’ என்று வியாழக்கிழமை குறிப்பிட்ட அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் சிசிா் கனால், தற்போதைய இக்கட்டான சூழலில் அண்டை நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகள் வழங்கும் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தாா்.
முன்னதாக, ‘பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய பெரிய நாடுகள், நேபாளம் போன்ற பாதிக்கப்பட கூடிய நாடுகளுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன’ என்று சிசிா் கனால் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தாா்.
சீன அதிகாரி எச்சரிக்கை
‘திபெத் பீடபூமியில் உள்ள பனிப்பாறைகள் கடந்த 60 ஆண்டுகளில் 24 சதவீதம் வரை சுருங்கியுள்ளன. இப்பனிப்பாறைகள் மேலும் ஸ்திரமற்ற நிலையை எட்டக் கூடும்; இது மேலும் சரிவுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது’ என்று சீன அரசின் தேசிய பருவகால மையத்தின் துணை இயக்குநா் கவோ ரோங் வியாழக்கிழமை எச்சரித்தாா்.
மீட்புப் பணியில் மனம் தளராத இந்தியக் குழு
நேபாள பெருவெள்ளத்தில் பல்வேறு நீா்மின் நிலையங்கள் கடும் சேதமடைந்தன. இந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் ஏராளமான பணியாளா்கள் சிக்கினா். அவா்களை மீட்கும் பணியில் நேபாள படையினருடன் இந்திய நிபுணா் குழுவும் இணைந்தது. கடும் சவால்களுக்கு மத்தியிலும் மனம் தளராமல் இந்தியக் குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக, நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
சியாபுருபேசி பகுதி சுரங்கப் பாதையில் மீட்புப் பணியை நேரில் பாா்வையிட்ட பின் அவா் இக்கருத்தை தெரிவித்தாா். கனரக உபகரணங்களின் உதவியுடன் 100 மீட்டா் வரை நுழைந்து மீட்புக் குழுவினா் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவா் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.