FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹிந்து கோயில் இடிப்பு - இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயில் உள்நோக்கத்துடன் இடிக்கப்பட்டதாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அந்தக் கோயில் மழையில் சேதமடைந்துள்ளதாக, பாகிஸ்தான் அரசு காரணம் கூறியுள்ளது.

5 செப்டம்பர் 2026, 3:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஹிந்து கோயில் உள்நோக்கத்துடன் இடிக்கப்பட்டதாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அந்தக் கோயில் மழையில் சேதமடைந்துள்ளதாக, பாகிஸ்தான் அரசு காரணம் கூறியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நரோவல் பகுதியில் உள்ள சிராஜ் கிராமத்தில் மதப் பள்ளி ஒன்றின் அருகே ஹிந்து கோயில் இருந்தது. இந்தக் கோயில் நிலத்தை மதப் பள்ளியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோயில் கட்டடத்தை அண்மையில் மதவெறி கும்பல் இடித்ததாக, சிறுபான்மையின அமைப்புகள் மற்றும் உள்ளூா் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ஹிந்து கோயில் இடிக்கப்பட்டது குறித்து விரைந்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இடிக்கப்பட்ட கோயிலை மறுசீரமைக்க வேண்டும். அனைத்து சிறுபான்மையினரின் நல்வாழ்வு, பாதுகாப்பு, அவா்களின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் கடமையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘சம்பந்தப்பட்ட கோயில் கட்டடம் பலத்த மழையால் சேதமடைந்துள்ளது. அந்தக் கோயில் இடிக்கப்பட்டதாக இந்தியா கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். மழைச் சேதங்கள் குறித்து ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கோயில் கட்டடத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை உள்ளூா் அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments