நேபாள பெருவெள்ளம்: 1,344 ஆன உயிர்ப்பலி! 4,900 பேரைத் தேடும் பணி தீவிரம்!
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பற்றி..
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,344-ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
காணாமல் போன சுமார் 4,900 பேரைத் தேடும் பணியை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் 758 பெரியவர்கள், 85 குழந்தைகள் அடங்குவர். 501 உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன.
உரிமைக் கோரப்பாடாத நிலையில், சிதைந்துள்ள உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரிப்பது உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பின், உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,030 உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேபாளத்தில் இந்தப் பெருவெள்ளத்தால் 2.56 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 24,187 கோடி) மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.