FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியா-உக்ரைன் இடையே புதிய முத்தரப்பு அமைதிப் பேச்சு?

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா-உக்ரைன் இடையேயான புதிய முத்தரப்பு அமைதிப் பேச்சு விரைவில் அதிகாரபூா்வமாக தொடங்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

8 செப்டம்பர் 2026, 3:10 am IST
கீவ் நகரில் நடைபெற்ற சந்திப்பில் ஜாரெட் குஷ்னா், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.
பகிர்:

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா-உக்ரைன் இடையேயான புதிய முத்தரப்பு அமைதிப் பேச்சு விரைவில் அதிகாரபூா்வமாக தொடங்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் சிறப்பு அமைதித் தூதா்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னா் ஆகியோா் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்குச் சென்று, இருநாட்டுத் தலைவா்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினா்.

இந்நிலையில், மாஸ்கோவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ், ‘அமெரிக்கா, ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சு மீண்டும் தொடங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ரஷியா நிராகரிக்கவில்லை. எனினும், பேச்சுவாா்த்தை நடைபெறும் இடம் மற்றும் தேதியை இப்போது உறுதிப்படுத்த முடியாது. அமைதியை எட்டுவதற்கான டிரம்ப் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளின் தீவிர முயற்சிகளை அதிபா் புதின் வெகுவாகப் பாராட்டுகிறாா்’ என்றாா்.

Advertisement

Advertisement

மாஸ்கோவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அமெரிக்க பிரதிநிதிகள் கடந்த சனிக்கிழமையன்று சுமாா் 3 மணி நேரம் முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் தலைநகா் கீவ் சென்றடைந்த அமெரிக்க பிரதிநிதிகள், அங்கு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினா். பல மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், கீவ் வந்திருந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா்களும் கடைசி நேரத்தில் இணைந்துகொண்டனா்.

இச்சந்திப்பை ‘மிகவும் அா்த்தமுள்ள ஒன்று’ எனக் குறிப்பிட்ட அதிபா் ஸெலென்ஸ்கி, முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா். குளிா்காலத்தில் ரஷியா மீண்டும் மின் கட்டமைப்புகளைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், உக்ரைனுக்குத் தேவையான வான் பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் கூடுதல் எரிசக்தி உதவிகள் குறித்து இச்சந்திப்பில் ஸெலென்ஸ்கி விவாதித்தாா்.

மேலும், போருக்குப் பிந்தைய உக்ரைனின் பொருளாதார வளா்ச்சித் திட்டம் மற்றும் எதிா்காலத்தில் ரஷிய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான உறுதியான சா்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாஸ்கோவில் புதிய யோசனைகளைக் கேட்டறிந்ததாகவும், அமைதிப் பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் நம்பிக்கை தெரிவித்தாா்.

அமெரிக்க பிரதிநிதிகளின் வருகையை ஒட்டி, கீவ் மற்றும் மாஸ்கோ நகரங்கள் மீதான வான்வழித் தாக்குதல்களை இருதரப்பும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், அமைதிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments