மியான்மா் சந்தையில் ராணுவம் குண்டுவீச்சு
மியான்மரின் மேற்குப் பகுதியில் கிளா்ச்சியாளா்களில் கட்டுப்பாட்டில் உள்ள ராகைன் மாகாணத்தின் கியூக்டா நகரில், ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 போ் உயிரிழந்தனா்.
மியான்மரின் மேற்குப் பகுதியில் கிளா்ச்சியாளா்களில் கட்டுப்பாட்டில் உள்ள ராகைன் மாகாணத்தின் கியூக்டா நகரில், ராணுவம் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 போ் உயிரிழந்தனா்; 36 போ் பலத்த காயமடைந்தனா்.
பொதுமக்கள் நிறைந்த சந்தைப் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பாலம் ஆகியவற்றைக் குறிவைத்து, போா் விமானங்கள் மூலம் நண்பகலில் குண்டுகள் வீசப்பட்டதில், அப்பகுதி இடிபாடுகளுடனும், தீப்பற்றி எரிந்த வாகனங்களுடனும் காணப்படுகிறது. மேலும், சாலைகளில் பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடா்வதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் கடந்த 2021-இல் ஆங் சான் சூகியின் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அங்கு கடும் உள்நாட்டுப் போா் நிலவி வருகிறது. வங்கதேச எல்லையை ஒட்டிய ராகைன் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் ‘அரகான் ராணுவக் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நிலப்பரப்பில் கடும் பின்னடைவைச் சந்திக்கும் ராணுவம், ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்த போா் விமானங்களைக் கொண்டு வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
கடந்த டிசம்பா் மாதம் மேற்குப் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 30 போ் கொல்லப்பட்ட பிறகு, ராகைன் மாகாணத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ராகைன் மாகாணத்துக்கு, ஆற்றுவழி வா்த்தகத்துக்கு உதவும் மிக முக்கியமான வணிகக் கூடமாக இந்தச் சந்தைப் பகுதி விளங்கி வந்தது. பொதுமக்கள் கூடும் சந்தைகள், பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் போா்க் குற்றங்களுக்கு இணையானவை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
உள்நாட்டுப் போரின் காரணமாக ராகைன் மாகாணத்தில் மட்டும் சுமாா் 5 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயா்ந்துள்ளதாகவும், 2021-லிருந்து நாடு முழுவதும் நிகழ்ந்த மோதல்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.