அரசியல் சூறாவளி கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்குமா? காப்பாற்றுமா?
காங்கிரஸில் உள்கட்சிபூசல் காரணமாக உருவாகியுள்ள அரசியல் திருப்பங்கள், கூட்டணி அரசின் முதல்வரான
காங்கிரஸில் உள்கட்சிபூசல் காரணமாக உருவாகியுள்ள அரசியல் திருப்பங்கள், கூட்டணி அரசின் முதல்வரான குமாரசாமிக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் காங்கிரஸைவிட மஜத அதிக ஆர்வம்காட்டி வருகிறது.
பல்வேறு பிரச்னைகளிலிருந்து மீட்டு வந்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் குமாரசாமிக்கு தற்போது ஜார்கிஹோளி சகோதரர்களால் ஏற்பட்டுள்ள பிரச்னை அவரை வேறு செயல்களில் ஈடுபடவிடாமல் மிகுந்த முக்கியத்துவத்தை தந்துள்ளது. மஜத எம்எல்ஏக்களைக் காப்பது மட்டுமல்லாது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்றுவிடாமல் தடுக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். பாஜகவுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் அக் கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் வெளிப்படையாகவே மஜத முக்கியத்துவம் அளித்துள்ளது.
நினைத்து ஒன்று; நடப்பது வேறு
சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தன. ஆட்சி அமைத்ததும், விவசாயிகளின் பாதுகாவலனாக தன்னை உயர்த்திக் கொள்ள விரும்பிய முதல்வர் குமாரசாமி, தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்.
இதை தனது 100 நாள்கள் ஆட்சியின் பெரும் சாதனையாக கருதிக் கொண்டிருந்த முதல்வர் குமாரசாமி, பட்ஜெட்டில் அறிவித்திருந்த திட்டங்களை படிப்படையாக செயல்படுத்த முனைப்போடு செயல்பட தொடங்கினார். அதற்குள், குடகு மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு அம்மாவட்டத்தின் பெரும்பகுதி அடித்து செல்லப்பட்டது. இயற்கை பேரிடரைச் சமாளிப்பதற்குள் முதல்வர் குமாரசாமி திணறிப்போனார்.
அடுத்தடுத்து பிரச்னை
வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு, அடுத்தக் கட்ட வளர்ச்சிப் பணிகளைக் கவனிக்க புறப்பட்ட முதல்வர் குமாரசாமிக்கு ஜார்கிஹோளி சகோதரர்கள் வடிவில் பேரிடி காத்திருந்தது. தங்களதுசெல்வாக்கை எள்ளளவும் குறைத்துக் கொள்ளவிரும்பாத அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவி மாவட்ட காங்கிரஸில் லட்சுமி ஹெப்பாள்கர் வடிவில் டி.கே.சிவக்குமார் ஆதிக்கம் செலுத்த முயல்வதை தடுக்க கட்சியில் திடீர் போர்க்கொடி உயர்த்திஉள்ளனர்.
தங்களது அரசியல் குருவான சித்தராமையா இரு வாரகால ஐரோப்பா சுற்றுப்பயணத்துக்குப் புறப்பட்ட சமயத்தில் ஜார்கிஹோளி சகோதரர்கள் கட்சியில் கலகம் செய்துவருவதை முதல்வர் குமாரசாமி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தங்களுடன் 14 எம்எல்ஏக்களை வைத்துள்ள ஜார்கிஹோளி சகோதரர்கள், பெலகாவி மாவட்ட காங்கிரஸில் டி.கே.சிவக்குமாரின் தலையீடு இருந்தால் தாங்கள் எந்த முடிவையும் எடுக்க தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆட்சிக்கு ஆபத்து!
இது கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிடுமோ என்ற அச்சம் காங்கிரஸில் மட்டும் அல்ல மஜதவிலும் ஏற்பட்டுள்ளது. ஜார்கிஹோளி சகோதரர்கள் பிரச்னையை காங்கிரஸ் மேலிடம் தீர்த்துவைக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்த முதல்வர் குமாரசாமி, தனது ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அறிவித்த முதல்வர் குமாரசாமி, பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்களை மஜதவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரு நாள்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மட்டுமல்லாது பாஜக எம்எல்ஏக்களையும் தொடர்பு கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
பாஜகவுக்குப் பதிலடி
விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி அனைவரையும் தனது தொடர்பு வளையத்துக்குள் கொண்டுவர முயற்சித்துவரும் குமாரசாமி, ஆட்சியைக் கவிழ்க்க பாஜகவினர் வெளிப்படையான முயற்சியில் ஈடுபட்டால் அப்போது தனது எதிர் திட்டத்தை பகிரங்கப்படுத்துவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் நடந்துவரும் அரசியல் நடவடிக்கைகளைக் கவனித்துவரும் முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கெளடா, ஜார்கிஹோளி சகோதரர்களின் பிரச்னையை தீர்த்து வைக்குமாறு காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார்.
நேரடி தலையீடு
இதனிடையே, ஜார்கிஹோளி சகோதரர்களிடம் நேரிடையாக பேசி பிரச்னையை சுமுகமாகத் தீர்க்கும் திட்டத்தையும் முதல்வர் குமாரசாமி வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உள்கட்சிபூசல் என்றாலும், அது கூட்டணி ஆட்சிக்கு பாதகம் ஏற்படும் என்பதால் உடனடியாக தீர்வு காண மஜதவும், முதல்வர் குமாரசாமியும் முற்பட்டுள்ளனர்.
இதனிடையே, மஜதவைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் சா.ரா.மகேஷ், தன்னிடம் 20 பாஜக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி செய்தால் எங்களுக்கும் அரசியல் நடத்த தெரியும் என்பதை பாஜகவுக்கு காட்டுவோம் என்று தெரிவித்துள்ளது பாஜகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.