FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விநாயகர் சதுர்த்தி: விழாக்கோலம் பூண்டது கர்நாடகம்

இன, மொழி பேதங்கள் மறந்து கிராமம், நகர்ப்புறங்கள் என கர்நாடகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

இன, மொழி பேதங்கள் மறந்து கிராமம், நகர்ப்புறங்கள் என கர்நாடகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. 
பெங்களூரில் உள்ள சந்தைகளில் புதன்கிழமை பூக்கள், காய்கனி, மா இலை, வாழை இலை உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருந்ததால், ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மக்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றனர். 
பெங்களூரில் விநாயகர் சதுர்த்தியன்று எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார்
செய்துள்ளனர். 
சிலைகளைக் கரைக்க ஏற்பாடு: விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அல்சூர்,சாங்கி, எடியூர், ஹெப்பாள் உள்பட 22 ஏரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான பகுதிகளாகக் கருதப்படும் டேனரிசாலை, சிவாஜிநகர், சாம்ராஜ்பேட்டை, ஜே.ஜே.நகர், யாரப்நகர், ஜே.சி.நகர், சிக்கபெட்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா, கண்காணிப்பு என பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.
நடமாடும் சிலை கரைப்பு
வாகனங்கள்: விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் வாகனங்களை நிறுத்த பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாநகரில் 292 வாகனங்கள் இயக்கப்படவிருக்கின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சிறிய சுற்றுச்சூழல் தோழமை விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துமாறு பெங்களூரு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி,  ராஜராஜேஸ்வரிநகரில் பிடிஏ ரங்கமந்திரா, நிமிஷாம்பா கோயில், ஜெயநகர் 4-ஆவது பிளாக் காவல்நிலையம், ஹனுமந்த்நகர் காவல்நிலையம், ஜீவன்பீமாநகர் காவல்நிலையம், அல்சூர் காவல் நிலையம், எலஹங்கா புதிய நகரம் சிவா கோயில், தொட்டபளாப்பூர் சாலை பூர்ணபிரக்ஞா உயர்நிலைப் பள்ளி, எலஹங்கா பழைய நகர பேருந்து நிலையம், சஹகார்நகர் விநாயகர கோயில், தாசரஹள்ளியில் பெங்களூரு மாநகராட்சி அலுவலகம்.
நெலகடரனஹள்ளி சதுக்கம், மாரோஹள்ளி கிராமத்தில் பெங்களூரு மாநகராட்சி அலுவலகம், பி.எஸ்.எல்.லேஅவுட் முதல் தடம், சுங்கதகட்டேயில் சிண்டிகேட் வங்கி அருகில், ஹெக்கனஹள்ளி குறுக்குச்சாலை, மகாதேவபுரா காவல்நிலையம், எச்ஏஎல் விமானநிலையசாலை, மார்த்தஹள்ளி குந்தனஹள்ளியில் ஏஇசிஎஸ் லேஅவுட், பீன்யா 2ஆவதுஸ்டேஜ் பேருந்துநிலையம் அருகில், லக்கெரேபூங்கா அருகில், கேஐஏடிபி குடியிருப்பு, பசவேஸ்வரநகரில் பவித்ரா பாரடைஸ் அருகில், விஜயநகர் பேருந்து நிலையம் அருகில், மாகடிசாலை சனி பகவான் கோயில்.
மஞ்சுநாத்நகர் முதல் குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குச்சாலை, மல்லேஸ்வரம் பிரிகேட் அடுக்குமாடி, யஷ்வந்த்புரம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடமாடும் சிலை கரைப்பு வாகனங்கள் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை நிறுத்தப்பட்டிருக்கும்.  இதேபோல, ஏரிகளில் இரவு 11 மணிவரை விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதற்கு மாநகரக் காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பெங்களூரில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முன்அனுமதி பெற வேண்டும். அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து இடையூறு இல்லாத வகையிலும், சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெறுவது அவசியம். 
தடை செய்யப்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படும் இடத்தில் தொடர்ந்து 2 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
சம்பந்தப்பட்ட இடத்தில் சமையல் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் அலங்காரம் செய்வதற்கு மின் வாரியத்திடம் (பெஸ்காம்) அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு, போக்குவரத்து போலீஸாரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம். 
விநாயகர் ஊர்வலத்தில் ஒருவேளை அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு நிகழ்ச்சி பொறுப்பார்களே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும். யாரையும் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்கக் கூடாது. 
விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யும் போது சம்பந்தப்பட்ட அமைப்புகளே அவர்களுக்கு சீருடை வழங்குவதோடு, கண்காணிக்க வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் தெரிவித்துள்ளார். 

22 ஏரிகளில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு
ஏரிகளில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் சம்பத்ராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு அல்சூர் ஏரியை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பெங்களூரில் அல்சூர் உள்ளிட்ட 22 ஏரிகளில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டோக்கன் பெற்று, வரிசையில் நின்று சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும். மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிஓபியால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய ஒருவேளை யாராவது கொண்டு வந்தால், அதனை நிராகரிக்காமல் தனியாக விஜர்சனம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தியன்று இரவு 10.30 மணிவரை விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யப்படும். அதன் பிறகு வருபவர்கள் ஏரிகளில் சிலைகளை வைக்கப் போட்டப்பட்டுள்ள மேஜைகளில் சிலைகளை வைத்துவிட்டு வந்தால், மறுநாள் காலை அவற்றை விஜர்சனம் செய்யப்படும். 
அனைத்து ஏரிகளிலும் தீயணைப்பு வாகனம், வீரர்களை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி மீட்பு பணியில் ஈடுபடும் அனுபவம் உள்ள நீச்சல் வீரர்களை ஏரியின் அருகே நிறுத்தி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பது, மைக்செட் போடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் தண்ணீர் வாகனங்களிலும், விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யலாம்.
ஏரிகளில் போடப்படும் பூ, இலை, தழைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, லாரிகளில் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

பெங்களூரு- பெலகாவி இடையே சிறப்பு ரயில்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பெங்களூரு-பெலகாவி இடையே சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பெங்களூரில்(யஷ்வந்தபூர்)இருந்து பெலகாவிக்கு தட்கல் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் 06581-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)-பெலகாவி தட்கல் சிறப்பு விரைவு ரயில் புதன்கிழமை(செப்.12) இரவு 8.15 மணிக்கு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
இந்த ரயில், வியாழக்கிழமை காலை 8.10 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தைச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில், ரயில் எண் 06582-பெலகாவி-பெங்களூரு(யஷ்வந்த்பூர்)தட்கல் சிறப்பு விரைவு ரயில் செப்.16-ஆம்தேதி இரவு 7.10 மணிக்கு பெலகாவி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்தபூர்) ரயில் நிலையத்தை வந்தடைகிறது. 
இந்த ரயில் இரு மார்க்கத்திலும் தும்கூரு, அரசிகெரே, பீரூர், தாவணகெரே, ஹரிஹரா, ஹாவேரி, ஹுப்பள்ளி, தார்வாட், லோண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொது பெட்டிகள் 10, பொருள் மற்றும் ஓய்வறை கொண்ட 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். அத்துடன் கூடுதலாக மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து
ஆளுநர் வஜுபாய் வாலா: கர்நாடக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கைவளம் நிறைந்த கர்நாடகத்தில் விவசாயிகள் செல்வ செழிப்போடு வாழ வாழ்த்துகிறேன். விநாயகர் சதுர்த்தியையொட்டி கர்நாடக மக்களுக்கு அன்பு, செல்வம், மகிழ்ச்சி, அமைதி கிடைக்கட்டும்.
முதல்வர் குமாரசாமி: மாநில மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வாழ்த்துகள். இந்த நன்னாள் கர்நாடக மக்களுக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க வாழ்த்துகிறேன். மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து பூஜிப்பதன் மூலம் கர்நாடக மக்கள் சுற்றுச்சூழல் தோழமையானவர்கள் என்பதை பறைச்சாற்ற வேண்டும்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா: கர்நாடகமக்கள் அனைவருக்கும் கெளரி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். இந்த நல்ல நாளில் நாட்டுமக்களுக்கு நிம்மதி, செல்வச் செழிப்பு தவிர அமைதி, நல்லிணக்கம் நிலைத்திருக்க வாழ்த்துகிறேன்.
இவர்களைத் தவிர, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார், மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெளடா, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத்
தெரிவித்துள்ளனர்.

இறைச்சி விற்க தடை
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பெங்களூரில் வியாழக்கிழமை (செப்.13) இறைச்சி விற்க மாநகராட்சி தடை
விதித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட உத்தரவு: கர்நாடகத்தில் செப்.13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதை தடைச் சட்டத்தின்கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செப்.13-ஆம் தேதி விலங்குகளைத் துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments