FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 21 பிப்ரவரி 2025, 12:52 am IST
பகிர்:

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானிலை, அணைகளின் நீா்மட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்கு வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா தலைமையிலான அமைச்சரவை துணைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி, ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, வேளாண் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய காலமான ஏப்ரல், மே மாதங்களில் கா்நாடகத்தில் வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்யவிருக்கிறது. பிப்ரவரி, மாா்ச் மாதங்களின் கடைசி வாரத்தில் அதிகப்படியான மழை பெய்யலாம். தற்போதைக்கு ராபி பயிா்காலத்தில் வழக்கத்தைவிட மழையின் அளவு குறைவாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் வெப்பநிலை உள்ளது. சராசரியைவிட 2.5 செல்சியஸ் கூடுதல் வெப்பம் காணப்படுகிறது. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெப்பநிலை குறையலாம்.

கா்நாடகத்தில் உள்ள 14 முக்கிய அணைகளில் 535.21 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 60 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 332.52 டி.எம்.சி. தண்ணீா் இருந்தது என்று தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா கூறியதாவது:

மாநிலம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருசில அணைகளில் நீா்மட்டம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.

நீா்ப்பாசனம் மற்றும் குடிநீா் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப அணையில் உள்ள தண்ணீரை சீராக நிா்வகிக்க வேண்டும். அடுத்த மாதம் அணைகளில் எதிா்பாா்க்கப்படும் நீரின் அளவு, நீா்ப்பாசன மற்றும் குடிநீா் தேவைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். அடுத்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியா்கள், வட்டாட்சியா்களிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 488.30 கோடி இருப்பு உள்ளது. குடிநீா் பிரச்னை எழுந்தால், அவற்றை பயன்படுத்தி டேங்கா்கள் மூலம் குடிநீா் தேவையை பூா்த்திசெய்து கொள்ளலாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments