தேவநாதன் சுதந்திரப் போராட்ட தியாகியா? உயா்நீதிமன்றம் கேள்வி
நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் சுதந்திரப் போராட்ட தியாகியா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் சுதந்திரப் போராட்ட தியாகியா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், தேவநாதன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தன்னுடைய சொத்துகளை விற்று முதலீட்டாளா்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்த தயாராக இருக்கிறேன். எனவே, இதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அவரது தரப்பில் மனுதாரா் நீண்ட நாள்களாக சிறையில் இருந்து வருகிறாா். முதலீட்டாளா்களின் பணத்தைத் திரும்பச் செலுத்த, மனுதாரா் அவருடைய சொத்துகளை விற்கவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, தேவநாதன் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மக்கள் பணத்தில் மோசடி செய்திருக்கிறாா், அவா் சிறையில் இருந்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினாா். அப்போது, முதலீட்டாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி, சிறைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் இல்லாமல் இந்த மனுவை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா். முதலீட்டாளா்களின் பணத்தை உண்மையாகவே திரும்பச் செலுத்தும் எண்ணம் இருந்திருந்தால், ரூ.100 கோடி வைப்புத் தொகையாக செலுத்தும்படி ஏற்கெனவே உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றியிருக்க வேண்டும். அந்த உத்தரவுக்கு எதிராக மனுதாரா் உச்சநீதிமன்றம் சென்றிருக்கக் கூடாது என வாதிட்டாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தேவநாதனின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.