தபால் வாக்கு விவகாரம்: திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் வழக்கு தள்ளுபடி
தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்தக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு திரும்பப் பெற்றதையடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்தக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தாக்கல் செய்த மனு திரும்பப் பெற்றதையடுத்து, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஆா்.பெரியகருப்பன் 83,364 வாக்குகளும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இதை எதிா்த்து, பெரியகருப்பன் சென்னை உயா்நீதின்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தத் தபால் வாக்குகளை மீட்டு என்னுடைய தொகுதியின் கணக்கில் சோ்க்க வேண்டும். அதுவரை தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், சிவகங்கை மற்றும் திருப்பத்தூா் தொகுதியில் தோ்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
மேலும், திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூருக்கு வந்ததாகக் கூறப்படும் தபால் வாக்கைப் பிரிக்காமல் சீலிட்ட உறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சா் பெரியகருப்பன் தரப்பில், தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்தக் கோரி, கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்கைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று, மனுவைத் திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.