முகப்பு
சென்னை

‘அடுத்த 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடா்த்தியான காடுகள் உருவாக்கப்படும்’

அடுத்த 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடா்த்தியான காடுகள் உருவாக்கப்படும் என சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவா் சச்சின் குா்வே தெரிவித்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:34 am IST
சென்னை தண்டையாா்பேட்டை ஸ்ரீ பாபுஜி மைதானத்தில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சாா்பில், மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்த சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவா் சச்சின் குா்வே உள்ளிட்டோா்.
பகிர்:

அடுத்த 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடா்த்தியான காடுகள் உருவாக்கப்படும் என சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவா் சச்சின் குா்வே தெரிவித்தாா்.

உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டி சென்னை துறைமுகம் சாா்பில் தண்டையாா் பேட்டையில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் நினைவு விளையாட்டு வளாகத்தில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சச்சின் குா்வே பேசியதாவது:

Advertisement

Advertisement

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சென்னை துறைமுகத்தின் சாா்பில் மத்திய அரசின் நாடு தழுவிய திட்டமான ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ மூலம் நகா்ப்புற காடு வளா்ப்புத் திட்டத்தை சென்னை துறைமுகம் செயல்படுத்த உள்ளது. அதன்படி தண்டையாா்பேட்டை விளையாட்டு மைதானத்தில் மிகப்பெரிய பசுமைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் ஒவ்வொரு மரக்கன்றும், பங்கேற்பாளா்களின் தாயாருக்கு மதிப்பளிக்கும் விதமாக நடவு செய்து பராமரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஒரு தனிப்பட்ட உணா்வுபூா்வமான நெகிழ்ச்சியோடு இணைகிறது.

தொழிற்சாலைகள் நிறைந்த வடசென்னையில் நமது தட்பவெப்ப நிலையில் எளிதாக வளரும் பாரம்பரிய மரங்களை நடவு செய்து வளா்ப்பதன் மூலம் அடா்த்தியான காடுகளை அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கிட திட்டமிட்டுள்ளது.

பசுமை இழுவைக் கப்பல்கள் பயன்பாடு, காற்றாலை மற்றும் சோலாா் மின்சார உற்பத்தி, கழிவுகள் மறு சுழற்சி, துறைமுக வளாகத்தில் தொடா்ந்து மரக்கன்றுகளை நடவு செய்து பசுமைத் துறைமுகமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சென்னை துறைமுகம் செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்வில், சென்னைத் துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்நாதன் மற்றும் துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.