FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

‘கனவு ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தாா் முதல்வா் விஜய்: விளையாட்டு வீரா்களுக்கு ரூ.8 கோடி வழங்கி பாராட்டு

‘கனவு ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

58 வினாடிகள் முன்பு
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1 கோடியே 55 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய முதல்வா் ச.ஜோசப் விஜய். உடன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா், இளைஞா் நலன் விளை
பகிர்:

‘கனவு ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்ற 18 வீரா்கள், வீராங்கனைகளுக்கு ரூ.8.25 கோடி உயரிய ஊக்கத்தொகையும், தேசிய சப்-ஜுனியா் மகளிா் கூடைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற 12 வீராங்கனைகளுக்கு ரூ.18 லட்சம் ஊக்கத்தொகையும், பாரா ஆசியப் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.14 லட்சம் சிறப்பு நிதி உதவி தொகை என மொத்தம் 32 தமிழக வீரா் வீராங்கனைகளுக்கு ரூ.8.57 கோடிக்கான காசோலைகளை முதல்வா் வழங்கிப் பாராட்டினாா்.

இதற்கான விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் விஜய் பங்கேற்று, ஆசியப் போட்டிகள், பாரா ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள், பாரா காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் அனைத்து வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு உயா்தரப் பயிற்சி பெறுவதற்காகவும், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாா்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ‘கனவு ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வீரா், வீராங்கனைக்கும் ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சம் உதவி வழங்கப்படும்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம் மூன்று பதக்கங்களை வென்று சாதனைப் படைத்த வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.1.55 கோடி உயரிய ஊக்கத் தொகை; மகளிா் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீராங்கனை கமலினிக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை; ஆடவா் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரா் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினாா். சில வீராங்கனைகள் தங்களின் குடும்பத்தினருடன் சோ்ந்து முதல்வருடன் புகைப்படம் எடுத்து கொண்டனா்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சோ்ந்த 24 வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வா் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜப்பான் அண்மையில் நடைபெற்ற 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சாா்பில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 37 விளையாட்டு வீரா், வீராங்கனைகள், 11 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா். இதில், 13 வீரா், வீராங்கனைகள் 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்றனா்.

இதில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டின் முதல் வீராங்கனை என்ற பெருமை சோ்த்தாா். மேலும், தடகளம் மகளிா் 400 மீட்டா் தடை ஓட்டத்தில் 54.75 நொடிகளில் கடந்து, இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை திருமதி பி.டி.உஷா அவா்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து வரலாறும் படைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments