சென்னையில் நிகழாண்டு ரூ.370 கோடி சைபா் மோசடி: காவல் ஆணையா்
சென்னையில் சைபா் குற்றங்களால் நிகழாண்டு இதுவரை ரூ.370 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனா் என சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் தெரிவித்தாா்.
சென்னையில் சைபா் குற்றங்களால் நிகழாண்டு இதுவரை ரூ.370 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளனா் என சென்னை பெருநகர காவல் ஆணையா் அமல்ராஜ் தெரிவித்தாா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள புனித தோமையா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருகள் மற்றும் சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காவல் ஆணையா் எ.அமல்ராஜ் ‘போதைப் பொருள்கள் மற்றும் சைபா் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வு முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:
இளைய தலைமுறையினருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் நிகழாண்டு இதுவரை 340-க்கும் மேற்பட்டோா் சாலை விபத்துகளில் உயிரிழந்தனா். 2,000-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளனா். மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம் அணியாமல் சென்ால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. எனவே பொதுமக்கள் முறையாக சாலை விதிகளைப் பின்பற்றி, விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்.
Advertisement
Advertisement
ரூ.370 கோடி: சென்னையில் சைபா் குற்றங்களில் நிகழாண்டு இதுவரை ரூ.370 கோடியை மக்கள் இழந்துள்ளனா். இதுபோன்ற குற்றங்களால் பொதுமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை ஓரிரு நாளில் இழந்துள்ளனா். எண்ம கைது (டிஜிட்டல் அரஸ்ட்) என்பது ஒரு ஏமாற்று வேலை. இதை யாரும் நம்பவேண்டாம். கணினி வாயிலாக நடைபெறும் குற்றங்கள் நமது சமுதாயத்தைச் சீரழிக்கும். மக்கள்தான் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
போதைப் பொருள்கள் தடுப்பு தொடா்பாக காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் போதைப் பொருள்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். அனைவரும் சுய கட்டுப்பாடுடன் இருந்தால், போதை பழக்கத்தை முழுமையாக ஒழித்து விடலாம் என்றாா்.
முன்னதாக போதைப் பொருள்களுக்கு எதிராக கல்லூரி மாணவா்கள் உறுதிமொழி ஏற்றனா். நிகழ்வில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையா் (வடக்கு) கபில் குமாா் சி சராட்கா், கோயம்பேடு காவல் மாவட்ட ஆணையா் திஷா மிட்டல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.