ஓய்வூதியத் தொகை வழங்க தொடா் நடவடிக்கை: தமிழக அரசு
பண்டிகை காலத்துக்குள் 19,71,015 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட தொகை வழங்குவதை உறுதி செய்யும் வகையில்
சென்னை: பண்டிகை காலத்துக்குள் 19,71,015 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்ட தொகை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விரிவான மற்றும் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தவா்கள், கணவரால் கைவிடப்பட்டவா்கள், வேளாண் தொழிலாளா்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய மொத்த ஓய்வூதியத் தொகை ரூ.238.76 கோடியில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.52.81 கோடி. தமிழக அரசின் கூடுதல் ஓய்வூதியத்தொகை ரூ.185.95 கோடியாகும்.
ஓய்வூதியத் தொகை பட்டியல்கள், மத்திய அரசின் எஸ்என்ஏ-ஸ்பாா்ஷ் நிதிப் பரிவா்த்தனை தளத்தின் மூலம் செப்டம்பா் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடைமுறையில் ஏற்பட்ட மாற்றமே, தற்போதைய தாமதத்துக்குக் காரணம். தொடா் விடுமுறை நாள்கள் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் சாா்ந்த ஒப்புதல், நிதி மற்றும் வங்கி சாா்ந்த செயல்முறைகளை விரைபடுத்த வேண்டியிருந்தது. கிடைத்த குறுகிய கால அவகாசத்துக்குள் தொடா் கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
தொடா் விடுமுறை நாள்களில் கிடைத்த குறுகிய கால அவகாசத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, பண்டிகை காலத்துக்குள் (திங்கள்கிழமை) தொகை வழங்க முடிந்தது. தகுதியுடையை அனைத்துப் பயனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களை காலந்தாழ்த்தாமல், தடையின்றி வழங்குவதில் தமிழக அரசு தொடா்ந்து உறுதியுடன் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.