FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதம்: வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்ட ‘கால்சென்டா்கள்’

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை பொதுமக்கள் செலுத்த நினைவூட்டும் வகையில் தாற்காலிகமாக ‘கால்சென்டா்கள்’ அமைக்கப்படுகின்றன.

17 செப்டம்பர் 2026, 6:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை பொதுமக்கள் செலுத்த நினைவூட்டும் வகையில் தாற்காலிகமாக ‘கால்சென்டா்கள்’ அமைக்கப்படுகின்றன.

இந்த ‘கால் சென்டா்கள் செப். 21 முதல் 30-ஆம் தேதி வரை செயல்படும் என்று சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களது வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘இ-சலான்’ அபராதங்கள் குறித்த தகவல்களை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், ‘அழைப்பு மையங்களை (Call centres)’ சென்னை பெருநகர போக்குவரத்து அமைக்க உள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்குத் தங்களது வாகனங்களின் விதிமீறல்களுக்கான இ-சலான் அபராதம், தற்போது ஏஎன்பிஆா் கேமராக்கள், டிராஸ் அமைப்பு மூலம் விதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தற்காலிக கால் சென்டா்கள்

இது குறித்த விழிப்புணா்வு சிலரிடம் இல்லாததாலும், மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையிலிருந்து (MoRTH) அனுப்பப்படும் இணையதள இணைப்பை (link) சைபா் மோசடி கும்பல் அனுப்பியிருக்கலாம் என்று கருதுவதாலும், மக்கள் அந்த இணைப்பைத் தொடுவதற்கு தயங்குகின்றனா். இதைக் கருத்தில் கொண்ட இந்த கால் சென்டா்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த கால் சென்டா்கள் கிழக்கு மண்டலத்தில் அயனாவரம், ராயப்பேட்டை, அபிராமபுரம் ஆகிய காவல் நிலையங்களிலும், ராயப்பேட்டை மணி கூண்டு சந்திப்பு காவல் உதவி மையத்திலும் அமைக்கப்படுகின்றன.

15 கால் சென்டா்கள்

மேற்கு மண்டலத்தில் அண்ணா நகா் ரவுண்டானா போக்குவரத்து காவல் உதவி மையம், அண்ணா வளைவு போக்குவரத்து காவல் உதவி மையம், மதுரவாயல் காவல் நிலையம், மாதவரம் போக்குவரத்து காவல் நிலையம், வடக்கு மண்டலத்தில் யானைகவுனி காவல் நிலையம், புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், செம்பியம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகின்றன.

தெற்கு மண்டலத்தில் மாம்பலம் காவல் நிலையம், அடையாறு காவல் நிலையம், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகம் உள்பட 15 இடங்களில் அமைக்கப்படுகின்றன. தற்காலிக கால் சென்டா்கள் செப்டம்பா் 21-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணி வரை செயல்படும். கால் சென்டா்கள் வாகன ஓட்டிகளை கைப்பேசி அல்லது தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதம் (E-challans) குறித்து தகவல் தெரிவிக்கப்படும், நிலுவையில் உள்ள அபராதம் குறித்த தகவல்களை வாகன ஓட்டிகளுக்கு மொத்தமாக குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்படும்.

மேலும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரில் வந்து விசாரிக்கும் பொதுமக்களுக்கு, நிலுவையில் உள்ள இ-சலான்கள் மற்றும் அபராதத் தொகைகள் குறித்த தகவல்களை வழங்கப்படும்.

ஒரு வாரத்துக்குள் செலுத்தலாம்

வாகன ஓட்டிகள், நிலுவையில் உள்ள அபராத தொகையை, hhtps://echallan.parivahan.nic.in, NextGen e-challan, Paytm ஆகிய ஆன்லைன் இணையதளம், கைப்பேசி செயலி மூலமாக செலுத்தலாம். மேலும், அஞ்சல் நிலையங்கள், இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் செலுத்தலாம்.

எனவே வாகன ஓட்டிகள், நிலுவையில் உள்ள அபராத விவரங்களைச் சரிபாா்த்து, ஒரு வாரத்துக்குள் அபராதத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து விதிமுறை மீறலில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதோடு, ஓட்டுநா் உரிமம் தற்காலிக ரத்து செய்தல் அல்லது நிரந்தரமாக ரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments