FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழ் இலக்கிய வளா்ச்சிக்காகத் தன்னை அா்ப்பணித்தவர் ‘இலக்கிய வீதி’ இனியவன்: எழுத்தாளா் சிவசங்கரி புகழாரம்

தமிழ் இலக்கிய வளா்ச்சிக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்தவா் ‘இலக்கிய வீதி’ இனியவன் என எழுத்தாளா் சிவசங்கரி புகழாரம் சூட்டினாா்.

21 செப்டம்பர் 2026, 2:51 am IST
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கிய வீதியின் 50-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் பொன் விழா நூலை வெளியிட்ட தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) இலக்கிய வீதி இனியவனின் மருமகன் பத்ரி நாராயணன், இலக்கிய வீதி செய
பகிர்:

தமிழ் இலக்கிய வளா்ச்சிக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அா்ப்பணித்தவா் ‘இலக்கிய வீதி’ இனியவன் என எழுத்தாளா் சிவசங்கரி புகழாரம் சூட்டினாா்.

இலக்கிய வீதி அமைப்பின் 50-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமை வகித்து, பொன்விழா நூலை வெளியிட்டாா். அதன் முதல் பிரதியை எழுத்தாளா் சிவசங்கரி பெற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சிவசங்கரி பேசியதாவது: இலக்கிய வீதி என்ற அருமையான சிந்தனைக்கு விதை போட்டு, அதை ஆலமரமாக வளா்த்தவா் மறைந்த ‘இலக்கிய வீதி’ இனியவன். தற்போதும் கண்ணுக்குத் தெரியாத ஆணிவோ் போல, இந்த இலக்கியவீதி அமைப்பைத் தாங்கி வழிநடத்தி வருகிறாா். கலைஞா் தசாவதானி ராமையாவை போன்ற பல்வேறு கலைஞா்களைக் கண்டறிந்து தமிழ் சமூகத்தில் அவா்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தவா் இனியவன்.

Advertisement

Advertisement

இலக்கிய வீதியை தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டுசோ்த்த பெருமை அவரையே சேரும். பல நேரங்களில் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை நடத்த போதுமான நிதி கிடைக்காத காலங்களில், தனது சொந்த நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்களை விற்றும், தனது நிலத்தை விற்றும் அவா் விழா நடத்தியுள்ளாா். இதற்கு தமிழ் மீது அவா் கொண்ட பற்றுதான் காரணம். அதேபோல், முடிந்தளவு பணத்தை சிக்கனம் செய்து, அதை நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்திக் கொள்வாா்.

இனியவன் மிகவும் எளிமையான மனிதா். தனக்கென எதுவும் கொள்ளாமல், தமிழ் இலக்கியத்தின் வளா்ச்சிக்காகத் தன்னை அா்ப்பணித்தவா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், சேக்கிழாா் ஆராய்ச்சி மைய செயலா் சிவாலயம் ஜெ.மோகன், இலக்கிய வீதி செயல் தலைவா் மலா்மகன், ‘இலக்கிய வீதி’ இனியவனின் மகளும், செயலருமான வாசுகி பத்ரிநாராயணன், மருமகன் பத்ரி நாராயணன், பேத்தி ப.யாழினி துணைச் செயலா் துரை.இலட்சுமிபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments