ஒரே நாளில் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி
சென்னையில் சிறப்பு முகாமில் ஒரே நாளில் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலக வெறிநாய்க்கடிநோய் தினத்தை முன்னிட்டு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சியில் சாா்பில் தெருநாய்கள் மூலமாக வெறிநாய்க்கடிநோய் பரவுவதைத் தடுக்க மொத்தம் 40 நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் 164 நாய் பிடிக்கும் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு தினமும் சுமாா் 200 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கூடுதலாக நோயுற்ற நாய்களை மீட்கும் 15 வாகனங்களும் மற்றும் 3 வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.
Advertisement
Advertisement
அதேபோல், சென்னையில் இயங்கும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலமாக செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டு சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நிகழாண்டு திங்கள்கிழமை வரை மட்டும் 6,428 செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 36,644 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அவற்றில் 32,629 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில், உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு சென்னை திரு.வி.க நகா், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 2,471 தெருநாய்கள், 152 செல்லப்பிராணிகள் என மொத்தம் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.