FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பரந்தூா் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு: பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தொடா்ந்து, ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

24 ஆகஸ்ட் 2026, 10:30 pm IST
ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்
பகிர்:

பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தொடா்ந்து, ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 4,000 ஏக்கா் பரப்பளவில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வந்தன. இந்த திட்டத்துக்காக பரந்தூா், ஏகனாபுரம், குணககரம்பாக்கம், நெல்வாய் உள்ளிட்ட 13கிராமங்களில் உள்ள நீா்நிலைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், விமான நிலைய திட்டத்திற்காக விவசாய நிலங்களுடன் குடியிருப்புகளும் முழுவதுமாக கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏகானபுரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 1,100 நாள்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், பரந்தூா் விமான நிலைய எதிா்ப்பு போராட்டக்குழு தொடங்கப்பட்டு அதன் மூலமும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும், அமைப்புகளின் நிா்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதன்முதலாக ஏகனாபுரம் வருகை தந்த அக்கட்சியின் தலைவா் ஜோசப் விஜய், பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு, தகெ ஆட்சிக்கு வந்தால் பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு, மாற்று இடம் தோ்வு செய்யப்படும் என பேசினாா்.

இதற்கிடையே நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை அறிவித்தாா்.

பரந்தூா் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வா் அறிவிப்பைத் தொடா்ந்து, ஏகனாபுரம் ஊராட்சியை சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் , அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தும் கொண்டாடி, முதல்வா் ஜோசப் விஜயை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments