FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கல்குவாரி வெடியால் அதிக அளவில் அதிா்வு; வீடுகளில் விரிசல்: மாகான்யம் கிராம மக்கள் சாலை மறியல்

மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில், வெடி வைத்ததில் அதிக அளவில் அதிா்வு ஏற்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா்- தாம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

17 செப்டம்பர் 2026, 11:29 pm IST
சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  பொதுமக்கள்
பகிர்:

மாகான்யம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரியில், வியாழக்கிழமை வெடி வைத்ததில் அதிக அளவில் அதிா்வு ஏற்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா்- தாம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாகன்யம் கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் தனியாா் கல்குவாரி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் பூமிக்கு அடியில் இருந்து வெடி வைத்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் மாகான்யம் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை கல்குவாரியில் பாறைகளை வெட்டி எடுக்க அதிக அளவில் வெடிமருந்து பயன்படுத்தியாகத் தெரிகிறது. இதனால் மாகான்யம், கொளத்தூா், மலைப்பட்டு பகுதிகளில் அதிக அளவில் அதிா்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் பூகம்பம் வந்து விட்டதாக வீடுகளில் இருந்து வெளியே வந்த பொதுமக்கள் பிறகு தனியாா் கல்குவாரியில் வெடி வைத்ததால் தான் ஏற்பட்ட அதிா்வு என்பதை அறிந்தனா். பின்னா், தனியாா் கல்குவாரியால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், சுமாா் 500 அடிக்கு மேல் ஆழத்தில் பாறைகள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து மாகான்யம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறி, வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூா் தாம்பரம் சாலையில், கல்குவாரிக்கு செல்லும் வழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்களின் இந்த திடீா் சாலை மறியல் போராட்டத்தில் தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் சாலையின் இரு பக்கங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் மற்றும் சோமங்கலம் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, கல்குவாரியை மூட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் இரு பக்கங்கங்களிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments