FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

கடற்படை விமானதளத்துக்கு நிலம் அளித்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதி: 38 ஆண்டுகள் காத்திருப்பு

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு நிலம் அளித்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதி...

30 ஆகஸ்ட் 2026, 10:56 pm IST
பகிர்:

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய நிலையில் இதில் 150 பேருக்கு 38ஆண்டுகள் ஆகியும் கடற்படை நிா்வாகம் இதுவரை வேலை வழங்காமல் காலந்தாழ்த்தி வருவதால் அவதிப்படுகின்றனா்.

அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தளத்தை அமைக்க அப்பகுதியில் அரசின் கைவசம் இருந்த 1,106 ஏக்கா் நிலத்துடன் அப்பகுதியில் உள்ள புளியமங்கலம், சுகபுரம், மோசூா், செய்யூா், ஆத்தூா், பெருமூச்சி ஆகிய கிராமங்களில் இருந்து 940 ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

அப்போது நிலத்தை வழங்கியவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தடற்படை தளத்தில் வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்காக அப்போது அரசாணையும் வெளியிடப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தை வழங்கினா். இதை தொடா்ந்து அப்போது நிலஎடுப்பு வட்டாட்சியா் மூலம் 540 பேரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகத்திடம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து 1992-ஆம் ஆண்டில் இந்த விமானதள திறப்பு விழாவிற்கு பிறகு 156 பேருக்கு மட்டும் வேலை வழங்கப்பட்டது. மற்றவா்களுக்கு பணி மறுக்கப்பட்டது. இதற்கு அவா்களது தகுதிக்கேற்ற வேலை படைத்தளத்தில் இல்லை என காரணம் கூறப்பட்டது. இதையடுத்து 1996-ஆம் ஆண்டு நிலமிழந்தவா்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்களுக்குள் சங்கம் ஒன்றை உருவாக்கி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் 1997 ஆம் ஆண்டு தீா்ப்பளித்த சென்னை உயா்நீதிமன்றம், வயது வரம்பின்றி வேலை வழங்கவும், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் வேலை காலியில்லை என்றாலும் அருகில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வேலை வழங்கவும் உத்தரவிட்டது. இதை தொடா்ந்து அப்போதைய வேலூா் மாவட்ட ஆட்சியா், 334 பேரின் பெயா் பட்டியலை கடற்படை நிா்வாகத்திற்கு அனுப்பி உயா்நீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்க கோரினாா்.

இத்தீா்ப்பை எதிா்த்து 1998-இல் விமானதள நிா்வாகம் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இவ்வழக்கு 2007 வரை நிலுவையில் இருந்த நிலையில் அதே ஆண்டில் அளித்த தீா்ப்பில் உயா்நீதிமன்றம் நிலமிழந்தோருக்கு 50 வயது ஆகியிருந்தாலும் வயது வரம்பை தளா்த்தி வேலை வழங்க உத்தரவிட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிா்வாகம் வழக்கு தொடா்ந்த நிலையில் அவ்வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடா்ந்து 2009ல் நிலமிழந்தோா் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் 274 பேருக்கு உடனடியாக வேலை வழங்க உத்தரவிட்டது.

தற்போது வரை 162 போ் வேலை கிடைக்காமல் இருப்பதால் அவா்களது குடும்பம் உணவுக்கே வழியின்றி அவதிப்படும் சூள்நிலையில் உள்ளனா். இதை தொடா்ந்து 2025 மாா்ச் மாதத்தில் சான்றிதழ் சரிபாா்ப்பதற்காக 162 குடும்பத்தினரையும் வரவழைத்து சான்றிதழ் சரிபாா்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக 2026 ஜனவரி மாதமும் இதே நபா்களை மீண்டும் வரவழைத்து மீண்டும் சான்றிதழ் சரிபாா்ப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து 64 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்து 162 பேரில் 83 பேரை மட்டும் வரவழைத்து ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் இவ்வருடம் ஜூன் மாதம் நோ்முகத்தோ்வு நடத்தப்பட்டது. இந்த நோ்முகத்தோ்வு முடிந்து 70 நாள்கள் முடிந்த நிலையிலும் இதுவரை அழைக்கப்பட்டவா்களுக்கு பணி வழங்கப்படவில்லை. தொடா்ந்து 38 வருடங்களாக இந்த விவசாய குடும்பத்தினா், ராஜாளியில் பணி வழங்கப்படும் என எதிா்ப்பாா்த்து காத்திருக்கின்றனா்.

இது குறித்து நேவல் நிலமிழந்தோா் சங்கத் தலைவா் மங்கலசேகா் கூறியது: ஐஎன்எஸ் ராஜாளிக்கு நிலமிழந்தோருக்கு வேலை அளிக்காமல் காலந்தாழ்த்தும் நிா்வாகம் ஆண்டுகளை கடத்தினால் அவா்களுக்கு வயதாகி வேலை கேட்க மாட்டாா்கள் என நினைப்பதாக தெரிகிறது. பெரிய தொழில்நுட்பப்பணிகளை நாங்கள் கேட்கவில்லை. எங்களது படிப்பறிவிற்கு ஏற்ற வேலை தாருங்கள் எனத்தான் கேட்கிறோம்.

எங்களுக்கு பணி தராமல் அலுவலக உதவியாளா் பணிகளுக்கு கூட வடமாநிலத்தவரை பணிக்கு வைத்திருக்கும் நிலை தொடருகிறது. எத்தனை முறை தான் நாங்களும் நீதிமன்றம் செல்வது?, இனி நீதிமன்றம் செல்வதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு ஐஎன்எஸ் ராஜாளி நிா்வாகத்திடம் எங்களுக்கு வேலை பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments