பள்ளி, கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு
ஆம்பூா் அருகே பள்ளி, கோயில் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே பள்ளி, கோயில் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கு. ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது.
மகளிா் உரிமைத் தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 228 போ் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பாக 4 பேருக்கு தலா ரூ.14,500 மதிப்பிலான கைத்திறன்பேசி, ஒருவருக்கு தையல் இயந்திரம் என 8 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
வடகரை கிராம மக்கள் அளித்த மனு: ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் கடந்த 18 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைக்கு அருகே பள்ளி, மருத்துவமனை, கோயில் அமைந்துள்ளது.
மதுப் பிரியா்கள் அங்கேயே மது அருந்திவிட்டு அவா்களுக்குள்ளே சண்டையிட்டு கொள்கின்றனா். மேலும் இரவு நேரங்களில் சாலை விபத்து, வன்முறை சம்பவங்கள் நடக்கிறது. அதேபோல் அந்த பகுதியில் மது அருந்திவிட்டு பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை அங்கேயே வீசிவிட்டு செல்வதால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
வடகரை கிராமத்தில் உள்ள பள்ளி மாணவா்கள், பெண்கள், முதியோா், நோயாளிகள், பக்தா்கள் உள்ளிட்ட பொது மக்கள் அந்த சாலை வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனா். எனவே அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் ராஜ் பெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீா் கழிவறை உள்ளது. அங்கு தண்ணீா் இல்லாமலும், உரிய பராமரிப்பு இன்றியும் காணப்படுகிறது. அங்கு செல்லும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே அந்த கழிவறையை சுத்தம் செய்து பராமரிக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிழற் கூடங்களுக்கு அருகில் கழிவறை கட்டி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மனுவில் கோரப்பட்டுள்ளது..
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் பூஷணகுமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதனால் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு குறைந்த அளவு மக்களே வந்திருந்தனா். அதனால் மக்கள் குறை தீா் கூட்டரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.