கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பொன்னேரி அருகே ஏரியை ஆக்கிரத்து பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அகற்ற, கால அவகாசம் கோரி கையில் நெல் பயிருடன் வந்து விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
பொன்னேரி அருகே ஏரியை ஆக்கிரத்து பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களை அகற்ற, கால அவகாசம் கோரி கையில் நெல் பயிருடன் வந்து விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஏரிகளில் குடிமராமத்து பணிகளின் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல் மற்றும் ஏரியின் கரைகளைப் பலப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியம், விடதண்டலம் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை அண்மையில் ஆட்சியர் ஆய்வு செய்தபோது, ஏரியில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு குடிமராமத்து பணிகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விடதண்டலம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, ஏரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட நெல்பயிர்களை அழித்து அந்த நிலத்தை மீட்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள நெல் பயிர்களை இன்னும் சில நாள்களில் அறுவடை செய்யவுள்ளதாகவும் அதுவரை பயிர்களை அழிக்க வேண்டாம் எனவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்ததை அடுத்து, ஏரி ஆக்கிரமிப்பு நிலங்களில் பயிர்களை அகற்ற கால அவகாசம் கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.