FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் அருகே அரசு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பகுதியில் மரக்கன்றுகள் வைக்கும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

திருவள்ளூர் அருகே அரசு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பகுதியில் மரக்கன்றுகள் வைக்கும் திட்டத்தை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
பொது இடங்களிலும், நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பாதுகாப்பதுடன், பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூர் அருகே  அம்மனம்பாக்கம் கிராமத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
பின்னர், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 
திருவள்ளூர் அருகே அம்மனம்பாக்கம் கிராமத்தில் 1.76 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீர்நிலை புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமிப்பு செய்து, 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்த வீடுகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்தோருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. எனவே குறிப்பிட்ட நீர் நிலை புறம்போக்கு இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தவிர்க்க பல்வேறு வகைகளில் 200 மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், இக்குறிப்பிட்ட பகுதியில் புறம்போக்கு இடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், மரக்கன்றுகளை பராமரிக்கவும் நரிக்குறவர் இன மக்கள் பசுமைக் காவலர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.    
அதேபோல், பொதுமக்களிடம் இருந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கியதுடன், அதன் அவசியத்தையும் விளக்கமாக எடுத்துரைத்து வருவதாக அவர் தெரிவித்தார். 
நிகழ்ச்சியில், திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், துணை வட்டாட்சியர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி, குருவாயல் முன்னாள் ஊராட்சித் தலைவர் தயாளன் உள்ளிட்ட பொதுப்பணித் துறை மற்றும் ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியில் பாஸ்கர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சமூக கிராம மேம்பாட்டு அறக்கட்டளை, கிராம சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து  மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீ சமூக கிராம மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகி வி.சிவராஜு தலைமை வகித்தார். பாஸ்கர் அறக்கட்டளை நிர்வாகிகள் பி.அபிஜித், ஆர்.சிவராமன், சாணாபுத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இ.சுப்பிரமணி, கிராம சமூக தொண்டு நிறுவன நிர்வாகி வா.ஏசுஅடியார், சமூக சேவகர்  போட்டோ செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம சமூக மேம்பாட்டு தொண்டு நிறுவன நிர்வாகி சபா.தமிழ்பாண்டியன் வரவேற்றார்.
நிகழ்வில், அரிமா சங்க அகில இந்திய பொது மேலாளர் கே.ரகுமாறன், தமிழ்நாடு பொது மேலாளர் ஜி.பிரவீண்குமார், சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலய முதன்மைப் பிரதிநிதி ஜான் சாலமோன், தலைமை ஆசிரியர் வி.தேவன்பு, துணைப் பொது மேலாளர் வி.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 
நிகழ்வில், பாதிரிவேடு, மாதர்பாக்கம், மாநெல்லூர், சாணாபுத்தூர், கண்ணம்பாக்கம், போந்தவாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம்,  1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, முதல் கட்டமாக பாதிரிவேடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து அந்தந்த கிராம மக்கள் அவரவர் பகுதிகளில் மரக்கன்றுகளை நடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments