FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

1,130 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை:  1,500 போலீஸார் பாதுகாப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1,130 இடங்களில் பக்தர்களால் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1,130 இடங்களில் பக்தர்களால் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் ஆர்வத்துடன் 5 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி வாகனங்களில்  ஊர்வலமாக ஏற்றிச் சென்றனர். அதேபோல், ஒவ்வொரு வீடுகளிலும் வழிபாடு செய்வதற்காக சிறு அளவிலான விநாயகர்  சிலைகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அந்த வகையில், மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் மற்றும் அமைப்பாளர்களால் 1,130 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இதில், திருவள்ளூர் பேருந்து நிலையம், காமராஜர்சிலை, வீரராகவர் கோயில் முன்புறம், பஜார், எம்.ஜி.ஆர்.சிலை,  பெரும்பாக்கம், ரயில் நிலையம், மணவாளநகர், ராஜாஜிநகர், பூங்காநகர், வி.எம்.
நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு செய்வதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியிலேயே பெரிய அளவிலான விநாயகர் சிலை ராஜாஜி நகரில் 12 அடி உயரம் கொண்ட சிலையாக நிறுவப்பட்டுள்ளது. 
மேலும், சிலை நிறுவப்பட்டுள்ள பகுதியில் அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில்  பொறுப்பாளர்கள் 2 பேரும், போலீஸார் 2 பேரும் பகல், இரவு என எந்த நேரமும் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும். இதனை அந்தந்தப் பகுதி காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் வாகனங்களில் ரோந்து சென்று அவ்வப்போது கண்காணிக்கவும் வேண்டும். சிலை நிறுவப்பட்ட பகுதியில் பிரச்னைகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் உடனே புகார் தெரிவிக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
திருத்தணியில்....
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்கள் மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோயில், அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர் கோயில், சேகர்வர்மா நகரில் உள்ள சக்திவிநாயகர் கோயில், சித்தூர் சாலையில் உள்ள விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதே போல், திருத்தணி தாலுக்காவில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள், ஒரு அடி முதல், 15 அடி உயரமுள்ள சிலைகளை வைத்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தி வழிபட்டனர். 
இதில், வியாழக்கிழமை இரவு, விநாயகர் திருவீதியுலா நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, புளியோதரை, கேசரி போன்ற பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இதே போல், திருத்தணியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை நிறுவி, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இரவு 7.30 மணிக்கு விநாயகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
மேலும், திருத்தணி பைபாஸ் சாலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல், இளைஞர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினர். இதனை முன்னிட்டு கலை நயத்தோடு பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைத்திருந்தனர். சிலை முன்பாக  யாகசாலை மற்றும் ஹோம குண்டம் நிறுவி பூஜைகள் நடத்தினர். 
நிகழ்ச்சியில், திருத்தணி எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், காவல் ஆய்வாளர் ஜே.வினாயகம், ஓட்டல் மூர்த்தி, தொழிலதிபர் எல்.டி.ராஜ்குமார், பாமக நிர்வாகிகள் நரேந்திரன், எம்.கே.ராதா, அம்மா பேரவை கே.வினாயகம், முஸ்தபா, டி.எஸ்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி மக்கள் செய்திருந்தனர்.
பொன்னேரியில்...
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொன்னேரியில் உள்ள விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.  
பொன்னேரியில் அகத்தீஸ்வரர் ஆலயம்,  ஆஞ்சநேயர் சந்நிதி, பொன்னியம்மன் கோயில் மற்றும் அப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட விநாயகர் கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  பொன்னேரியில் உள்ள முக்கிய வீதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன. 
விநாயகர் சதுர்த்தியையொட்டி அங்குள்ள ஹரிஹரன் கடை வீதியில், சிறிய களிமண் விநாயகர் சிலை, அருகம்புல், எருக்கம்பூ மாலை, வண்ணக் காகிதம் கொண்டு செய்யப்பட்ட குடைகள், வாழையிலை தோரணங்கள், அவல், பொரி கடலை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
களிமண் விநாயகர் சிலை  குளத்தில் கரைப்பு ...: களிமண் பிள்ளையார் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்ட பொதுமக்கள் பின்னர் மாலை நேரத்தில் அவற்றை அருகில் இருந்த நீர் நிலைகளில் கரைத்தனர்.  பொன்னேரியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான களிமண் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கரைத்தனர்.
புழல் பகுதியில்...
புழல் அருகே,  பாலவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவும், ராஜவிநாயகர் சிலை திறப்பு விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றது. 
சென்னை மாதவரத்தை அடுத்த புழல் பாலாஜி நகரில் நடைபெற்ற 10-ஆம் ஆண்டு பால விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ராஜவிநாயகர் சிலை திறப்பு விழாவில், புழல் ஒன்றிய முன்னாள் தலைவர் வி.பர்ணபாஸ் கலந்து கொண்டு விநாயகர் சிலையை திறந்து வைத்தார். நிகழ்வில், 25-ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் வதனா பர்ணபாஸ், சமூக சேவகர் பி.பாபு, சங்கீதாபாபு ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாலாஜிநகர் நண்பர்கள் செய்திருந்தனர். இதில், புழல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கொளத்தூரில்...
 சென்னை கொளத்தூரில் பிரமாண்டமான வாழைப்பூ விநாயகரை வடிவமைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.  
சென்னை கொளத்தூர் லட்சுமி அம்மன் கோயில் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
இந்த விழாவையொட்டி 3,800 வாழைப்பூக்கள், 300 அன்னாசி பழங்கள், 10 கட்டு கரும்புகள் ஆகியவற்றைக்கொண்டு 25 அடி உயரம், 22 அடி அகலத்தில் பிரமாண்டமான வாழைப்பூ விநாயகர் சிலையை உருவாக்கி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். 
இந்த விநாயகர் சிலை, கொளத்தூர் நண்பர்கள் குழு சார்பில் 15 நாள்களில் உருவாக்கப்பட்டது. இக்குழுவினர், கடந்த 2013-இல் தேங்காய், இளநீர் கொண்டு பிரமாண்ட விநாயகர் சிலையையும், 2014 -இல் சோளக் கதிர்களைக் கொண்டும், 2015-இல் கரும்புகளைக் கொண்டும், 2016-இல் அன்னாசி பழங்களைக் கொண்டும், 2017-இல் தர்பூசணி பழங்களைக் கொண்டும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments