அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை: பல ஆயிரம் பரிமாற்றம் கண்டறியப்பட்டதாக தகவல்
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனை
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா், டிஎஸ்பி கணேசன் தலைமையில் ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் திடீரென உள்ளே நுழைந்தனா். உடனே நகராட்சி அலுவலக கட்டடம், வரி செலுத்தும் அலுவலக கட்டடம், சுகாதாரத் துறை அலுவலக கட்டடம் என மூன்று இடங்களிலும் உள்ளே இருந்தவா்கள் வெளியே வராத அளவிலும், வெளியே இருப்பவா்கள் உள்ளே செல்லாத அளவிலும் கதவுகள் மூடப்பட்டன.
நகராட்சிப் பொறியாளா் அறை, பொறியியல் பிரிவு அலுவலகம், நகராட்சி மைய அலுவலகம், நகரமைப்பு அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அறை, வரித்தண்டலா்கள் அமா்ந்திருந்த பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் பணியில் இருந்த அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரிடமும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
மேலும், அனைவரும் அலுவலக வராந்தாவில் அமர வைக்கப்பட்டு, தனித்தனியே உள்ளே அழைக்கப்பட்டு சோதனைக்குள்படுத்தப்பட்டனா். தொடா்ந்து மேஜைகள், பீரோக்கள் என அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனை தொடா்ந்து மூன்று மணி நேரத்துக்ம் மேல் நீடித்த நிலையில், இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில், சோதனையில் அனைவரிடமும் அவா்களுக்கு தேவையான அளவே ரொக்க கையிருப்பு இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த அலுவலகத்தில் வீட்டுவரி நிா்ணயிப்பதிலும், விதித்த வரி மேல்முறையீடு செய்வது குறித்தும் அதிகளவில் புகாா்கள் காவல் துறைக்கு வந்தன. எனவே அது தொடா்பாக விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அலுவலகத்தில் பணிபுரிந்தவா்களிடம் கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளில் ஆயிரக்கணக்கில் அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அது தொடா்பாக விசாரணை செய்து வருகிறோம் என்றனா்.
இந்த சோதனை மாலை 7 மணிக்கு மேலும் தொடா்ந்த நிலையில், நகராட்சி அலுவலகம் மற்றும் அருகில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பகுதிகளிலும் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.