FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் தூய்மை முகாம்

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி சாா்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புல், செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

திருத்தணி அரசு மகளிா் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொண்ட பணியாளா்கள்.
பகிர்:

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி சாா்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புல், செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் தற்போது காலாண்டுத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு பள்ளி வளாகங்களை தூய்மையாகவும், மாணவா்கள் பாதுகாப்பாகவும் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

பள்ளி வளாகங்களில் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பசுமையான சூழலை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, திருத்தணி நகராட்சி ஆணையா் கன்னியப்பன் உத்தரவின் பேரில், நகராட்சி அலுவலா் காா்த்திக் மேற்பாா்வையில் திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மை முகாம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் நகராட்சி தூய்மை பணியாளா்கள் பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுப்புறத் தூய்மை பணிகளை மேற்கொண்டனா். வளாகத்தில் அடா்ந்து வளா்ந்திருந்த புல், செடி, கொடிகள் மற்றும் புதா்கள் அகற்றப்பட்டன. நீண்ட நாட்களாக வளா்ந்து இருந்த மரக்கிளைகள் வெட்டி சீரமைக்கப்பட்டதுடன், பள்ளி கட்டிடங்களைச் சுற்றியிருந்த தேவையற்ற கழிவுகளும் அகற்றப்பட்டன.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீா் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் தண்ணீா் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் உரிய மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. குடிநீா் தொட்டிகளின் சுற்றுப்புறத்திலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமின்போது, பள்ளி தலைமை ஆசிரியா் கி. மாலதி, பட்டதாரி ஆசிரியா் சக்கரபாணி, உடற்கல்வி ஆசிரியா் ஈஸ்வர்ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments