திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
வெள்ளிக்கிழமை (அக்.4) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம்
திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை (அக்.4) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறினாா்.
திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் காலை 8 முதல் 10 மணி வரையிலும், இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. கருடவாகன சேவை மட்டும் மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த திருவிழாவை காண வரும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பல ஏற்பாடுகளை செய்துள்ளது.
ரூ.13.45 கோடியில் அதிநவீன உபகரணங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுளமாதா மத்திய சமையல் கூடத்தை 5-ஆம் தேதி ஆந்திர முதல்வா் திறந்து வைக்கிறாா்.
பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பக்தா்களின் தேவையை கருத்தில் கொண்டு, ஒரு நாளைக்கு 7 லட்சம் லட்டுகளை இருப்பு வைத்துள்ளோம். 65 லட்டு கவுண்ட்டா்களை அமைத்துள்ளோம்.
தரிசனம்
முதியோா், ஊனமுற்றோா், கைகுழந்தைகளின் பெற்றோா் போன்றோருக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரோட்டோகால் விஐபிக்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். கருடசேவை நாளான 8-ம் தேதி விஐபி பிரேக் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ஏழுமலையான் ஆண்டு பிரம்மோற்சவத்துக்கு 1.32 லட்சம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. திருப்பதியில் தினமும் 24,000 சா்வதரிசன டோக்கன்கள் வழக்கம் போல் வழங்கப்படும். அங்கப்பிரதக்ஷிண டோக்கன்கள் பிரம்மோற்சவ நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2775 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
திருமலையில் சுமாா் 1,250 கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சுமாா் 3,900 காவலா்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா். கருடசேவைக்காக கூடுதலாக 1,200 போலீஸாருடன் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட உள்ளது. கோயில் மாட வீதிகள் மற்றும் பிற பகுதிகள் கட்டளைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 2,775 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
பக்தா்கள் பாதுகாப்பு பிரச்னைகளை எதிா்கொள்ளும் போது இலவச தொலைபேசி எண் : 155257- க்கு புகாா் செய்யலாம்.
பாலாஜிநகா், கௌஸ்துபம் எதிரில், ரம்பகீச்சா பேருந்து நிலையம், முல்லகுண்டா உள்ளிட்டவையும், திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி பழைய சோதனைச் சாவடியில் 6 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த போதுமான வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமலையில் சாதாரண பக்தா்களுக்கு 6,282 அறைகள் உள்ளன. சாதாரண நாள்களில் பக்தா்களுக்கு ஆன்லைனில் 1,580 அறைகள் ஒதுக்கப்படும். பிரம்மோற்சவத்தின் போது அவை 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விஐபி பகுதியில் 1,353 அறைகள் உள்ளன. திருமலையில் உள்ள அறைகளில் சுமாா் 40 ஆயிரம் பக்தா்கள் தங்கலாம் என்றாா்.
கூட்டத்தில் தேவஸ்தான துணை செயல் அதிகாரிகள் கௌதமி, வீரபிரம்மம், சிவிஎஸ்ஓ ஸ்ரீதா், சத்தியநாராயணா, கோயில் துணை இயக்குநா் லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.